உ.பி., உத்தரகண்ட் விஷச் சாராய பலி எண்ணிக்கை 72-ஆக உயர்வு: எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட விஷச் சாராய சாவுகள் தொடர்பாக சிறப்புப் புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட விஷச் சாராய சாவுகள் தொடர்பாக சிறப்புப் புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
 முன்னதாக, விஷச் சாராய சாவுகள் தொடர்பாக 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 இதற்கிடையே, விஷச் சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 இதுகுறித்து ஹரித்துவார் காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஜன்மஜே காண்டூரி மற்றும் சஹாரன்பூர் காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் ஆகியோர் கூறியதாவது:
 உத்தரப் பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்ந்துள்ளது. இதில், உத்தரப் பிரதேசத்தில் 36 பேரும், உத்தரகண்டில் 36 பேரும் அடங்குவர்.
 இதுதொடர்பாக ஃபகீரா என்பவரையும், அவரது மகன் சோனு என்பவரையும் கைது செய்துள்ளோம். உத்தரப் பிரதேசத்திலிருந்து விஷச் சாராயத்தை வாங்கிய அவர்கள், உத்தரகண்டிலுள்ள பலுபூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விநியோகித்துள்ளனர்.
 அவர்களிடம் நடத்திய விசாரணையில், தாங்கள் வாங்கி வந்த விஷச் சாராயம் வழக்கமான நிறத்தில் இல்லாமல் பால் போன்று இருந்ததாகவும், அதிலிருந்து டீசல் வாடை வந்ததாகவும் அவர்கள் கூறினர்.
 அந்த விஷச் சாராயத்தை தயாரித்த சஹாரன்பூர் மாவட்டத்தின் பூண்டென் கிராமத்தைச் சேர்ந்த சிலரது வீடுகளில் சோதனை நடத்தினோம். எனினும், அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
 தற்போது தலைமறைவாக உள்ள அவர்களைத் தீவிரமாக தேடி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர். உத்தரகண்டின் ஹரித்துவார் நகரில், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 13-ஆம் நாள் ஈமச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
 அப்போது அங்கு விநியோகிக்கப்பட்ட விஷச் சாராயத்தை அருந்தியவர்களில், தற்போதைய நிலவரப்படி 72 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் உத்தரகண்டின் ஹரித்துவார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டதைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 சமாஜவாதி கட்சி மீது யோகி குற்றச்சாட்டு: இந்த விஷச் சாராய சாவுகளுக்கு சமாஜவாதி கட்சியினர் காரணமாக இருக்கலாம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஏற்கெனவே ஆஸம்கர், ஹர்டாய், கான்பூர், பாராபங்கி ஆகிய இடங்களில் நேரிட்ட விஷச் சாராய சாவுகளுக்கு சமாஜவாதி கட்சியினர்தான் காரணம் என்பது தெரிய வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள சாவுகளுக்கும் அவர்களே காரணமாக இருக்கலாம். இந்தச் சம்பவத்துக்குப் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி இருப்பதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை' என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 "பாஜக அரசே காரணம்': உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் ஏற்பட்டுள்ள விஷச் சாராய சாவுகளுக்கு அந்த மாநிலங்களை ஆளும் பாஜக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று சமாஜவாதி தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். சமாஜவாதி கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதியும், இந்த விஷச் சாராய சாவுகளுக்கு பாஜக அரசே காரணம் என்று குற்றம் சாட்டியுனார்.
 பிரியங்கா கருத்து: உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் விஷச் சாராயம் அருந்தி இத்தனை பேர் உயிரிழந்ததற்குக் காரணமானவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
 இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் விஷச் சாராயத்தால் ஏராளமானோர் பலியான தகவல் அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குற்றவாளிகள் மீது இரு மாநில பாஜக அரசுகளும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com