
நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக ராபர்ட் வதேரா தனது தாயாருடன் அமலாக்கத் துறை முன்பாக செவ்வாய்க்கிழமை ஆஜராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகத்தில் காலை 10 மணியளவில் ராபர்ட் வதேரா, தனது தாயார் மெளரீனுடன் ஆஜராக உள்ளதாகத் தெரிகிறது. இதற்காக வதேராவும், அவரது தாயாரும் விமானம் மூலமாக திங்கள்கிழமை மதியம் ஜெய்ப்பூர் வந்தடைந்தனர்.
நில மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை 3 முறை அழைப்பாணை அனுப்பியும், வதேரா ஆஜராகவில்லை. இந்நிலையில், அமலாக்கத் துறை தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக் கோரி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்திருந்தார்.
எனினும், அந்த வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு வதேராவும், அவரது தாயாரும் உரிய ஒத்துழைப்பு அளிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, அவர்கள் இருவரும் விசாரணைக்காக ஆஜராகின்றனர்.
நில மோசடி வழக்கில், கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வதேரா மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை அதிகாரி வாக்குமூலம் பெற இருப்பதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜஸ்தான் மாநிலம், பீகானிரில் நில மோசடி செய்யப்பட்டதாகக் கூறி ராபர்ட் வதேராவுக்கு எதிராக அமலாக்கத் துறை கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. பீகானிரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதி அருகே உள்ள இடத்தில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் ராஜஸ்தான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. சம்பந்தப்பட்ட இடத்தை எம்எஸ் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவெட் லிமிடெட் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த நிறுவனத்துடன் வதேராவுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. எனவே அந்த நிறுவனத்தின் செயல்பாடு தொடர்பாக வதேராவிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முனைகிறது.
ராபர்ட் வதேரா, விசாரணைக்காக அமலாக்கத் துறை முன்பு ஆஜராவது இது 4-ஆவது முறையாகும். ஏற்கெனவே, வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியதாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்காக வதேரா 3 முறை ஆஜராகியுள்ளார்.
பிரியங்காவுக்கு வாழ்த்து: கிழக்கு உத்தரப் பிரதேசத்துக்கான காங்கிரஸ் பொதுச் செயலராக பொறுப்பேற்ற பிரியங்கா காந்தி, அந்த மாநிலத்தில் தனது முதல் பேரணியை திங்கள்கிழமை மேற்கொண்ட நிலையில், அவரது கணவர் ராபர்ட் வதேரா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வதேரா தனது முகநூலில் வெளியிட்ட வாழ்த்து பதிவில், உத்தரப் பிரதேசத்துக்காக பணியாற்றும், இந்தியாவுக்காக சேவையாற்றும் உனது (பிரியங்கா) புதிய பயணத்துக்கு வாழ்த்துகள். நீ நல்லதொரு தோழியாக, சிறந்த மனைவியாக, தாயாக இருந்து வருகிறாய்.
அரசியல் களம், பழிவாங்கும் உணர்ச்சி நிறைந்தது. எனினும், மக்களுக்கு சேவை செய்வது பிரியங்காவின் கடமை என்பதால், அவரை இந்திய மக்களின் கைகளில் ஒப்படைக்கிறேன். அவரை மக்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.