வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேரம் பேசியுள்ள ராகுல் காந்தி: மத்திய அமைச்சர் பதில் குற்றச்சாட்டு 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேரம் பேசியுள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேரம் பேசியுள்ள ராகுல் காந்தி: மத்திய அமைச்சர் பதில் குற்றச்சாட்டு 

புது தில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேரம் பேசியுள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:

இந்தியா - பிரான்ஸ் இடையே ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பே, இந்த ஒப்பந்தம் தனக்குக் கிடைக்கப் போகிறது என்று தொழிலதிபர் அனில் அம்பானி அறிந்திருந்தார் என்பதை மின்னஞ்சல் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கருக்குக் கூட தெரியாத சில தகவல்கள், ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே அனில் அம்பானிக்குத் தெரிந்திருக்கிறது. இது அரசுப் பணிகள் தொடர்பான ரகசியம் காக்கும் சட்டத்துக்கு எதிரான செயலாகும். இதற்காகவே மோடியை சிறையில் அடைக்கலாம் என்று கூறியிருக்கும் ராகுல், மோடி ஒருவரால் மட்டுமே இந்த ஒப்பந்தம் பற்றி அம்பானியிடம் சொல்லியிருக்க முடியும்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி தாக்கல் செய்யும் அறிக்கையை நாங்கள் ஏற்கப்போவதில்லை என்றும், அது பிரதமர் மோடி எனும் காவல்காரரின் கணக்கு தணிக்கையாளர் தாக்கல் செய்யும் அறிக்கை.

இவ்வாறு ராகுல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேரம் பேசியுள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

ராகுலின் பேட்டிக்கு பதிலடி கொடுத்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடிக்கு எதிராக ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு வெட்கமற்ற ஒன்றாகும். பொறுப்பற்றதனத்தின் உச்சம். ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்ஸின் மின்அஞ்சல் பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை ராகுல் காந்தி கையில் வைத்து பேசுகிறார்.

ஒரு நிறுவனத்தின் உள்நிர்வாகம் தொடர்பான மின்அஞ்சல் நகல் ராகுல் காந்திக்கு கிடைத்துள்ளது என்றால், வெளிநாட்டு நிறுவனங்களுடன் ராகுல் காந்தி பேரம் பேசியுள்ளது தெளிவாகத் தெரிய வருகிறது.

பிரதமர் மோடி ராஜதுரோகம் செய்துவிட்டார் என்று ராகுல் கூறியுள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இந்திரா காந்தி குடும்பத்தில் வந்த பிரதமர்களுடன் எங்கள் தலைவர்களுக்கு கூட பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் நாங்கள் ஒருபோதும் யாரையும் ராஜதுரோகம் என்று குற்றம்சாட்டியதில்லை.

இந்த குற்றச்சாட்டினால் ராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்றை பூசிக்கொண்டுள்ளார்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com