சுடச்சுட

  

  உ.பி. : விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தம்

  By DIN  |   Published on : 13th February 2019 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  akilesh


  உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெள விமான நிலையத்தில் அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டார்.
  உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர்கள் சங்க விழாவில் கலந்து கொள்வதற்காக, லக்னெளவில் உள்ள செளதரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை அகிலேஷ் யாதவ் சென்றார். இந்நிலையில், அங்கிருந்து  பிரயாக்ராஜ் செல்வதற்கு அனுமதிக்காமல், விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்ப மேளா விழாவிலும் அகிலேஷ் கலந்து கொள்ள இருந்ததாக கூறப்படுகிறது.
  இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், அலாகாபாத் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நான் செல்வதில் அரசுக்கு விருப்பமில்லை. அதனால்தான் பிரயாக்ராஜ் செல்வதற்கு விமானம் ஏற விடாது என்னை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். லக்னெள விமான நிலையத்தில் தற்போது உள்ளேன். இதற்குமேலும், இது போன்ற அநீதிகளை நமது நாட்டு இளைஞர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று பாஜகவுக்கு தெரிய வேண்டும்  என்று தெரிவித்திருந்தார்.
  சட்டப்பேரவையில் அமளி: இதனிடையே, அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்டதை அறிந்த சமாஜவாதி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அகிலேஷ் யாதவை பிரயாக்ராஜ் செல்ல விடாது தடுத்து ஜனநாயகத்தை பாஜக அரசு கொன்று விட்டது என்று சமாஜவாதி எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் 20 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் அவை மீண்டும் தொடங்கியது. 
  இந்த பிரச்னைக்கு பதிலளித்து சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா பேசுகையில், விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது. அலாகாபாத் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு அகிலேஷ் சென்றால், அங்கு சட்ட, ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்று கருதி, பயணத்தை ரத்து செய்யுமாறு முதல் நாளே அகிலேஷுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார். சட்டம், ஒழுங்கை காப்பாற்றுவதற்காக அரசு செய்ய வேண்டியதை செய்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அகிலேஷ் மீறியிருக்க கூடாது. அவை நடவடிக்கைகளை கோஷம் எழுப்பி எவ்வாறு கெடுப்பது என்பது மட்டும்தான் அகிலேஷுக்கு தெரியும் என்றார். இதனிடையே, மாநிலங்களவையிலும் இந்த பிரச்னையை எழுப்பி சமாஜவாதி கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
  இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி, சமாஜவாதி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  மாயாவதி கண்டனம்: அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்ட செயலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், பகுஜன் சமாஜ்-சமாஜவாதி கட்சிகளின் கூட்டணியை பார்த்து மத்தியில் மற்றும் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு பயந்து விட்டது என்று நினைக்கிறேன். அதனால்தான் ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சர்வாதிகார ஆட்சிக்கு உதாரணமாக இந்த செயல் உள்ளது என்று குற்றமாசாட்டினார்.
  சட்டம், ஒழுங்கை காப்பற்றவே நடவடிக்கை: அலாகாபாத் பல்கலைக்கழகத்துக்கு  அகிலேஷ் யாதவ் சென்றால் அங்கு வன்முறை நிகழக் கூடும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்தது. அதனால் சட்டம், ஒழுங்கை காப்பாற்றும் பொருட்டு,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் சங்க நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் பங்கேற்றால் அங்குள்ள மாணவர்கள் மத்தியில் வன்முறை ஏற்படக்கூடும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்தது. மேலும், அகிலேஷின் வருகையை தடுத்து நிறுத்துமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் அரசை கேட்டுக்கொண்டது. அதனடிப்படையிலேயே அரசு செயல்பட்டது என்றார்.
  இளைஞர்களின் ஆதரவை இழந்து விட்டது பாஜக:  சட்டம், ஒழுங்கை காப்பற்றவே அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று யோகி ஆதித்யநாத் கூறியதற்கு அகிலேஷ் யாதவ் பதிலடி தந்துள்ளார். அவர் கூறுகையில், நான் செல்வதில் உண்மையாகவே பிரச்னை இருக்கிறது என்றால், விமான நிலைய அதிகாரிகள் எனது பயணத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டிருப்பர். நான் சென்றால் வன்முறை நிகழலாம் என்று அரசாகவே ஒரு முடிவுக்கு வந்து விட்டு அதன்படி செயல்படுகிறது. கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளுக்கு பாஜக துரோகம் இழைத்து விட்டது. இளைஞர்கள் என்னிடம் கூறுவது இதுதான். 
   நாங்கள் விழித்து விட்டோம். விழிப்புணர்வோடு உள்ளோம். பிரித்தாளும் கொள்கை உடையவர்களை மறுமுறையும் நம்பி ஏமாற மாட்டோம் என்று தெளிவாக உள்ளனர்.  உத்தரப் பிரதேச இளைஞர்களுக்கு நான் ஆதரவாக உள்ளேன். அவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளார்கள் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai