சுடச்சுட

  

  கருப்புப் பண ஆய்வறிக்கை: நாடாளுமன்ற நிலை குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்: மத்திய நிதியமைச்சர்

  By DIN  |   Published on : 13th February 2019 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கருப்பு பணம் தொடர்பான ஆய்வறிக்கைகள், நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
  மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிதி மசோதா மீதான விவாதத்தின்போது, இந்த விவகாரத்தை பிஜு ஜனதா தளம் உறுப்பினர் பி.மஹ்தாப் எழுப்பினார். அவர் கூறுகையில், கருப்புப் பணம் தொடர்பான மூன்று ஆய்வறிக்கைகள், நிதி விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த அறிக்கைகளை, உறுப்பினர்களிடம் பகிர வேண்டாம் என்று அவருக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது என்று குற்றம்சாட்டினார். இதேபோல், கருப்புப் பணம் தொடர்பான ஆய்வறிக்கைகள், நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சௌகதா ராயும் வலியுறுத்தினார்.
  இதையடுத்து, மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பேசிகையில், கருப்புப் பணம் தொடர்பான ஆய்வறிக்கைகள், நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். அதேசமயம், இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது. அந்த ஆய்வறிக்கைகளில் உள்ள புள்ளி விவரங்களில் வேறுபாடுகள் உள்ளன. இதனால், அந்த விவரங்கள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, அந்த குழுவுக்கு தலைவர் ஆவார்.
  முன்னதாக, கடந்த 2011-இல் அப்போதைய காங்கிரஸ் அரசு சார்பில் தில்லியைச் சேர்ந்த தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கல்வி நிறுவனம் (என்ஐபிஎஃப்பி), தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (என்சிஏஇஆர்), ஃபரீதாபாதிலுள்ள தேசிய நிதி மேலாண்மை கல்வி நிறுவனம் ஆகியவை மூலம் கருப்பு பணம் தொடர்பான ஆய்வுகள் தொடங்கப்பட்டன. 
  மேற்கண்ட நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் முறையே கடந்த 2013, டிசம்பர் 30; 2014, ஜூலை 18; 2014, ஆகஸ்ட் 21 ஆகிய தேதிகளில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai