சுடச்சுட

  

  கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க வழிகாட்டு நெறிமுறைகள்: 7 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை

  By DIN  |   Published on : 13th February 2019 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  News_7_supremecourt

  அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், சிறுபான்மை கல்வி நிறுவனம் அல்ல என்ற அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மற்றும் அதுசார்ந்த விவகாரங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், அதனை 7 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைப்பதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
  மேலும், கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அந்த அமர்வு உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  உத்தரப் பிரதேசத்திலுள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், சிறுபான்மை நிறுவனம் அல்ல என்று கடந்த 2006-இல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக நிர்வாகமும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன.
  இதனிடையே, மத்திய அரசின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை திரும்ப அனுமதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பாஜக தலைமையிலான அரசு கடந்த 2016-இல் மனுத் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
  அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடர்பாக அஜீஸ் பாஷா என்பவர் தொடுத்த வழக்கில் கடந்த 1968-இல் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, அலிகார் பல்கலைக்கழகம், மத்திய அரசின் பல்கலைக்கழகம்தான்; சிறுபான்மை நிறுவனம் அல்ல என்று தீர்ப்பளித்தது. அதன் பிறகு, அப்பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்துக்கு அளிக்கும் வகையில், கடந்த 1981-இல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத் திருத்தத்தை, கடந்த 2006-இல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதென, முந்தைய காங்கிரஸ் அரசு எடுத்த நிலைப்பாடு தவறானது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த மனுவுக்கு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, அலிகார் பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ராஜீவ் தவான், ஒரு கல்வி நிறுவனம்,சிறுபான்மை நிறுவனமாக அங்கீகரிக்கப்பட என்னென்ன விஷயங்கள் தேவை என்பது உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் வரையறுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
  இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், 7 நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வுக்கு பரிந்துரைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அந்த அமர்வு நிர்ணயிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai