சுடச்சுட

  

  காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 7-ஆவது நாளாக மூடல்

  By DIN  |   Published on : 13th February 2019 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலமுறை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து 7ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மூடப்பட்டது. 
  இதுகுறித்து ராம்பன் போக்குவரத்து டிஎஸ்பி (தேசிய நெடுஞ்சாலைகள்) சுரேஷ் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் குவிந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மாரூக் பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு இரவும், பகலும் சிரமப்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், ராம்சு மற்றும் பந்தியால் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு மீண்டும்  நிலச்சரிவு ஏற்பட்டதால் அதை சீரமைக்கும் பணி கடந்த 6 மணி நேரமாக நடைபெற்றது.  
  ராம்சு-பந்தியால் இடையே 12 கி.மீ. தூரத்துக்கு ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவால் சுமார் 24 பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகளும், எரிவாயு உருளை ஏற்றிய சரக்கு லாரிகளும் மரூக் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இப்பகுதியில் மட்டும் சாலை சீரமைக்கப்பட்டதால் அந்த லாரிகள் செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீநகர் நோக்கி கிளம்பிச் சென்றன. 
  கடந்த புதன்கிழமை இப்பகுதியில் பெய்த கடும் பனிப்பொழிவு மற்றும் மழை, பனிச்சாரல் காரணமாக காஸிகுண்டு-பானியால்-ராம்பான் பகுதியும், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி தொடங்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜவஹர் சுரங்கப்பாதையும் அடைக்கப்பட்டன. 
  அதேபோல, முந்தைய நாள் இரவு ஆனோஹி நீர்வீழ்ச்சி, கெல்லா மோர்ஹ் மற்றும் பந்தியால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவையும் சீரமைக்கும் பணியில் ஏராளமான பணியாளர்களும், இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டன. 
  சாலை சீரமைப்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்தால் மட்டுமே இச்சாலை போக்குவரத்துக்காக திறக்கப்படும் என்று தெரிவித்தார். 
  இதனிடையே, கடந்த வியாழக்கிழமை ஜவஹர் சுரங்கப்பாதை பகுதியில் பனிமழையில் சிக்கிக் கொண்ட 1400 சுற்றுலாப்பயணிகள்  இந்திய விமானப்படை விமானம் மூலமாக வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரையிலும் மீட்கப்பட்டனர்.  இதனிடையே, செவ்வாய்க்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரையிலும் இப்பகுதியில் மீண்டும் கடுமையான பனிப்பொழிவும், மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது அப்பகுதியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai