சுடச்சுட

  

  கொல்கத்தா காவல் துறை ஆணையரிடம் 4ஆவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

  By DIN  |   Published on : 13th February 2019 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajev_kumar


  சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா காவல் துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம் நான்காவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
  இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
  ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு வந்தார்.
  சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்புடைய வழக்கில், ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜீவ் குமாருடன் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான குணால் கோஷிடமும் கடந்த சில தினங்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
  இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், நிதி நிறுவன மோசடி தொடர்பாக குணால் கோஷிடம் விசாரிக்கப்பட்டது. அவர் கொல்கத்தா திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது என்றார்.
  சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா நகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அமைத்தார். ஆனால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில முக்கிய ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியது. 
  இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜீவ் குமாருக்கு சிபிஐ பலமுறை அழைப்பாணை அனுப்பியது. ஆனால், சிபிஐயின் ஆணையை அவர் தொடர்ந்து நிராகரித்து வந்ததையடுத்து, அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் கடந்த 3-ஆம் தேதி முயற்சித்தனர். ஆனால், மேற்கு வங்க காவல் துறையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 
  சிபிஐயின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள்கள் தர்னாவில் ஈடுபட்டார். இதையடுத்து, விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாகவும், மேற்கு வங்க அரசு அவருக்கு உதவி வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ராஜீவ் குமாருக்குக் கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது.
  அதன்படி, கடந்த 4 தினங்களாக தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai