சுடச்சுட

  

  சிபிஐ உயரதிகாரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உச்சநீதிமன்றம் அதிரடி

  By DIN  |   Published on : 13th February 2019 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nageswararav


  சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ், அந்த அமைப்பின் சட்ட ஆலோசகர் எஸ்.பாசுரம் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர்கள் இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
  மேலும், நீதிமன்றப் பணிகள் முடியும் வரையிலும் அவர்கள் இருவரும் விசாரணை அறையிலேயே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
  அதன் அடிப்படையில், சிபிஐ முன்னாள் பொறுப்பு இயக்குநர் நாகேஸ்வர ராவும், சிபிஐ சட்ட ஆலோசகர் பாசுரமும் செவ்வாய்க்கிழமை மாலை  வரை நீதிமன்ற அறையிலேயே இருந்தனர்.
  பிகாரில் அரசு காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்த வழக்கை, உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ், சிபிஐ இணை இயக்குநர் ஏ.கே.சர்மா தலைமையிலான குழுவினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஏ.கே.சர்மாவை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யும் உத்தரவை கடந்த மாதம் 17ம் தேதி பிறப்பித்தார் நாகேஸ்வர ராவ்.  அதற்கான சட்ட ஆலோசனையை பாசுரம் வழங்கியிருந்தார்.
  இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து, நாகேஸ்வர ராவும், பாசுரமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.
  தண்டித்த நீதிபதிகள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை, அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
  அப்போது, நாகேஸ்வர ராவும், பாசுரமும் நீதிமன்ற அவமதிப்பு செய்திருப்பது உறுதியாகியிருப்பதாகவும், அவர்கள் இருவரும் தலா ரூ.1 லட்சம் அபராதம் செலுத்துவதுடன், நீதிமன்றப் பணிகள் முடியும் வரையில் விசாரணை அறையிலேயே அமர வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இருவரது நிபந்தனையற்ற மன்னிப்பை நிராகரிப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
  சிபிஐ அதிகாரிகள் தரப்பில் ஆஜராகிய மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும், மீண்டும் முன்வைத்தார்.
  அப்போது ஆவேசமடைந்த தலைமை நீதிபதி, நீதிமன்ற நடவடிக்கைகள் புதன்கிழமை முடியும் வரையிலும் அவர்கள் இங்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? எங்கு இருந்தீர்களோ, அங்கேயே போய் அமருங்கள் என்றார்.
  தில்லி நீதிமன்றம் தள்ளுபடி:
  சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் பதவி வகித்த போது, அவர் பணியிடமாற்றம் செய்த அதிகாரிகளின் நிலை என்னவென்பதை சிபிஐ தெளிவுபடுத்த  வேண்டும் என உத்தவிடக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அதிகாரிகள் இந்த வழக்கை தொடுக்க முடியும் எனக் குறிப்பிட்டு அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai