சுடச்சுட

  

  பிகார்: ஆர்ஜேடி கூட்டணியில் போர்க்கொடி உயர்த்தும் மாஞ்சி

  By DIN  |   Published on : 13th February 2019 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பிகாரில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணியில் முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஸ்வாஹாவின் கட்சிக்கு ஒதுக்கும் தொகுதிகளை விட குறைவான தொகுதிகளை ஒதுக்கினால் அதை ஏற்க மாட்டோம் என்று முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
  பிகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசியபோது, இதை மாஞ்சி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
  குஸ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சிக்கு ஒதுக்கும் தொகுதிகளை விட குறைவான தொகுதிகளை எங்களது கட்சிக்கு ஒதுக்கக் கூடாது. தேர்தலில் இத்தனை தொகுதிகள்தான் ஒதுக்க வேண்டும் என்று எங்களது கட்சி வலியுறுத்தவில்லை. அதேநேரத்தில் குஸ்வாஹா கட்சிக்கு மகா கூட்டணியில் ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு இணையாகவோ அல்லது அதிகமாகவோ தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.
  குறைவான தொகுதிகளை ஒதுக்கினால், அதை எங்களது கட்சி ஏற்காது. தொகுதிகளை ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்டால், பாஜக கூட்டணிக்கு திரும்புவீர்களா? என கேட்கிறீர்கள். அதுதொடர்பாக தற்போது கேள்வியே எழவில்லை. 
  பாஜக கூட்டணியில் இருந்து விலகி, மகா கூட்டணியில் சேர்ந்தபோது, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் கரங்களை வலுப்படுத்துவேன் என்று உறுதியெடுத்தேன். அப்படியிருக்கையில் பாஜக கூட்டணிக்கு எப்படி நான் திரும்புவேன். தொகுதி பங்கீடு தொடர்பாக லாலு பிரசாத் யாதவை விரைவில் சந்தித்து பேசவுள்ளேன்.
  தொகுதி பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டால், வேறு கூட்டணிக்கு செல்லும் திட்டமில்லை. தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருப்பது என்ற முடிவையே எடுப்பேன் என்றார் மாஞ்சி.
  முன்னாள் முதல்வரான மாஞ்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, கடந்த 2015ஆம் ஆண்டில் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலில் மாஞ்சி கட்சி போட்டியிட்டது. ஆனால் அந்தத் தேர்தலில் மாஞ்சி மட்டுமே அவரது கட்சியில் வெற்றி பெற்றார்.
  இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாஞ்சி விலகினார். அதன்பின்னர் மகா கூட்டணியில் மாஞ்சியின் கட்சி இணைந்தது.
  முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திர குஸ்வாஹா, பாஜக கூட்டணியில் இருந்து விலகி, மகா கூட்டணியில் அண்மையில் சேர்ந்தார். அக்கூட்டணியில் 4 தொகுதிகளை குஸ்வாஹாவின் கட்சி கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai