சுடச்சுட

  

  புதிய முறை: கேபிள், டிடிஎச் சந்தாதாரர்களுக்கு டிராய் கூடுதல் அவகாசம்

  By DIN  |   Published on : 13th February 2019 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  TRAI


  கேபிள், டிடிஎச் சேவையில் புதிய முறையின்கீழ் விருப்பமான சேனல்களை சந்தாதாரர்கள் தேர்வு செய்வதற்கு வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  சந்தாதாரர்களே தங்களுக்கு பிடித்தமான சேனல்களை, கேபிள் மற்றும் டிடிஎச் சேவைகளில் தேர்வு செய்யும் புதிய முறையை அமல்படுத்த கேபிள், டிடிஎச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சந்தாதாரர்கள் தங்களுக்கு பிடித்தமான சேனல்களை தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதிய முறையின்படி, சேனல்களை அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்கள் இன்னமும் தேர்வு செய்யாமல் இருப்பதாக டிராய்க்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சந்தாதாரர்களுக்கு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  அதேபோல், சந்தாதாரர்களின் மொழி, அவர்கள் வாழும் பகுதி, விருப்பம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்கு உகந்த சேனல்களை கொண்ட புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் கேபிள், டிடிஎச் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  புதிய முறைக்கு சந்தாதாரர்கள் மாறும் வரையிலும், ஏற்கெனவே அவர்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் திட்டத்தையே தொடர்ந்து அளிக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.
  நாடு முழுவதும் 10 கோடி பேர் கேபிள் சேவையையும், 6.5 கோடி பேர் டிடிஎச் சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் கேபிள் டிவி சந்தாதாரர்களில் 65 சதவீதம் பேரும், டிடிஎச் சந்தாதாரர்களில் 35 சதவீதம் பேரும் புதிய முறையின்படி, தங்களுக்கு பிடித்தமான சேனல்களை தேர்வு செய்துள்ளனர் என்று டிராய் தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai