ஆமதாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கட்சியினர் அணிவித்த மாலையை ஏற்றுக் கொண்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. உடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி (இடமிருந்து 2-ஆவது)
ஆமதாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கட்சியினர் அணிவித்த மாலையை ஏற்றுக் கொண்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. உடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி (இடமிருந்து 2-ஆவது)

இந்தியாவை சர்வதேச சக்தியாக முன்னிறுத்துவதில் மக்களவைத் தேர்தலுக்கு முக்கியப் பங்கு: அமித் ஷா

இந்தியாவை சர்வதேச அளவில் வலுவான சக்தியாக முன்னிறுத்துவதில் வரும் மக்களவைத் தேர்தல் முக்கியப் பங்கு வகிக்கும்; இந்தியாவில் மக்களின்


இந்தியாவை சர்வதேச அளவில் வலுவான சக்தியாக முன்னிறுத்துவதில் வரும் மக்களவைத் தேர்தல் முக்கியப் பங்கு வகிக்கும்; இந்தியாவில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற வலுவான தலைவராக மோடி திகழ்கிறார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அமித் ஷா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற வலுவான தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து மோடிக்கு எதிராக கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றன. அவர்களில் தலைமைப் பொறுப்புக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தகையவர்கள் இணைந்து ஆட்சி அமைக்க ஆசைப்படுகிறார்கள். அவர்களில் ஒருவராவது நாட்டில் பரவலாக செல்வாக்குப் பெற்றவர்களாக இருக்கிறார்களா?.
சொந்த மாநிலத்தில் கூட செல்வாக்கு இழந்த தலைவர்கள் இணைந்து தேசிய அளவில் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று ஆசைப்படுவது நகைப்புக்குரியது. இவர்களால் தங்களில் யார் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று அறிவிக்க முடியுமா? அப்படி முயற்சித்தால் அந்தக் கூட்டணி முழுமையாக காணாமல் போய்விடும். 
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. பொருளாதாரரீதியாக இந்தியா முன்னெப்போதும் இல்லாத வலுவான நிலையை எட்டியுள்ளது. இந்தியாவை சர்வதேச சக்தியாக தொடர்ந்து முன்னிறுத்துவதில் வரும் மக்களவைத் தேர்தல் முக்கியப் பங்கு வகிக்கும்.
நான் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளேன். அப்போது மக்கள் மத்தியில் பிரதமர் மோடி மீது எந்த அளவுக்கு நம்பிக்கையும், அபிமானமும் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டேன். இப்படியொரு மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.
முன்னாள் பிரதமர் தேவெ கௌடா, குஜராத்தில் பிரசாரம் செய்தால் ஏதாவது விளைவுகள் ஏற்படுமா? திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியால், மகாராஷ்டிரம் சென்று மக்களின் வாக்குகளைப் பெற்றுவிட முடியுமா? அகிலேஷ் யாதவ் கேரளத்துக்குச் சென்று தேர்தலில் ஆதரவைப் பெற முடியுமா? இது எதுவுமே நடக்காது. ஏனெனில், இவர்கள் அனைவரும் மாநிலத் தலைவர்கள்தான். ஆனால், பிரதமர் மோடி நாட்டின் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அங்கு அவருக்கென்று தனி செல்வாக்கு உண்டு. அவரை விரும்பும் மக்கள் அனைத்து மாநிலங்களிலும் உள்ளார்கள்.
மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறப்போவது உறுதி. கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகளை பெறும் நோக்கில் நமது தொண்டர்கள் மக்களைச் சந்திக்க வேண்டும். 
பாஜக அரசு செய்துள்ள மக்கள் நலப்பணிகளின் பயன்களை மக்களிடம் விளக்கினாலே நமது அமோக வெற்றி உறுதி செய்யப்படும் என்றார் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com