ஊழல்வாதிகளுக்கு என்னை கண்டு அச்சம்: பிரதமர் மோடி

ஊழல்வாதிகளுக்கு என்னை கண்டு அச்சம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மாநிலம், குருஷேத்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி. 
ஹரியாணா மாநிலம், குருஷேத்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி. 


ஊழல்வாதிகளுக்கு என்னை கண்டு அச்சம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மாநிலம், குருஷேத்திரத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துவரும் பெண்களை கௌரவிக்கும் தூய்மை சக்தி 2019 நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மத்தியில் நேர்மையான மற்றும் வெளிப்படையான அரசு அமைவதற்கு மக்கள் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து, மத்தியில் அமைந்த எனது தலைமையிலான அரசு, அரசு அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இடைத் தரகர்களையும், ஏழைகளின் உரிமைகளை பறிக்கும் செயலில் ஈடுபட்டோரையும் களையெடுத்தது.
நாட்டில் இருக்கும் நேர்மையான மக்கள் ஒவ்வொருவரும், மக்களின் பாதுகாவலனான எனது மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் ஊழல்வாதிகளோ என்னைக் கண்டு அஞ்சுகின்றனர். என்னை தங்களின் பிரச்னையாக அவர்கள் கருதுகின்றனர். 
ஹரியாணாவைச் சேர்ந்த சிலர் (முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா ஆகியோரை குறிப்பிட்டார்) தங்களுக்கு எதிராக மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதைக் கண்டு கவலையடைந்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியானது, பல்வேறு குணங்களை கொண்ட கட்சிகளின் கலவையாகும். 
எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் இடையே, விசாரணை அமைப்புகளுக்கும், நீதிமன்றங்களுக்கும், எனக்கும் மிரட்டல் விடுப்பது மற்றும் எச்சரிக்கை விடுப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த மிரட்டல்கள், அவதூறுகள் ஆகியவற்றை கண்டு மக்களின் பாதுகாவலனான நான் அச்சப்பட மாட்டேன். 
எனது பணியை செய்வதையும் நிறுத்த மாட்டேன். அவர்களுக்கு அடிபணியவும் மாட்டேன். நாட்டில் இருந்து ஊழலையும், தூய்மையின்மையையும் முழுவதும் களையெடுப்பதற்கு மத்திய அரசு தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த பிரசாரத்துக்கு மக்களாகிய உங்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு தொடர்ந்து இருக்க வேண்டும் என்றார் மோடி.
இந்நிகழ்ச்சியில் ஹரியாணா ஆளுநர் சத்யதேவ் நரேன் ஆர்யா, முதல்வர் மனோகர் லால் கட்டார், பெண் பஞ்சாயத்து தலைவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தில் முக்கிய பங்கு வகித்து வரும் பெண்கள் உள்ளிட்டோர் அதிகளவில் கலந்து கொண்டனர்.
 இந்நிகழ்ச்சியில் 6 வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதில் ஜஜ்ஜாரில் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், குருஷேத்திரத்தில் 
ஸ்ரீ கிருஷ்ணா ஆயுஷ் பல்கலைக்கழகம் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களும் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com