காஷ்மீர்: 2 நாள் முழுஅடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டம் 35-ஏ பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள


ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டம் 35-ஏ பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இந்த வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், புதன்(பிப்.13) மற்றும் வியாழன்(பிப்.14) ஆகிய இரு நாள்களும் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில், அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 உருவாக்கப்பட்டது. மேலும், வெளி மாநில மக்கள் ஜம்மு-காஷ்மீரில் சொத்து வாங்குவதை தடுப்பது, பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்யும் ஜம்மு-காஷ்மீர் பெண்களுக்கு சொத்துரிமை மறுப்பு ஆகியவற்றை சட்டப் பிரிவு 35-ஏ உறுதி செய்கிறது. 
இந்த இரு சட்டப்பிரிவுகளுக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் இதுவரை  பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் பிப்ரவரி 13 அல்லது 14-ஆம் தேதியில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நாள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு காஷ்மீர் மக்களுக்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதுதொடர்பாக காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பு கூறுகையில், ஜம்மு-காஷ்மீர் மக்களின் சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கு இந்தியா முயற்சி செய்து வருகிறது. முன்னதாக, அந்த மனுக்கள் மீதான விசாரணை ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று கூறினர். தற்போது இந்த வாரத்தில் விசாரணை என்று கூறி காஷ்மீர் மக்களை ஏமாற்றி விட்டனர். இந்த விசாரணைக்கு எதிரான நமது நிலைப்பாட்டை வலுவாக கூறவேண்டுமென்றால், இரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றது.
மேலும், ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலன்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால் அதற்கான விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் பிரிவினைவாதிகள் எச்சரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com