தில்லி ஹோட்டலில் தீ விபத்து: 2 தமிழர்கள் உள்பட 17 பேர் சாவு; 35 பேர் காயம்

தில்லி கரோல் பாக்கில் உள்ள தனியார் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 17 பேர்
தில்லி கரோல் பாக்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தீப்பற்றி எரியும் தனியார் ஹோட்டல்.
தில்லி கரோல் பாக்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தீப்பற்றி எரியும் தனியார் ஹோட்டல்.


தில்லி கரோல் பாக்கில் உள்ள தனியார் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
தமிழர்கள் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கரோல் பாகில் அதிகளவில் வசித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாகவும் இது இருந்து வருகிறது. இங்குள்ள அர்பித் பேலஸ் என்ற நான்கு அடுக்கு ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு தமிழர்கள், மூன்று மலையாளிகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தில்லி காவல் துறை துணை ஆணையர் மதூர் வர்மா கூறியதாவது: 
தில்லி கரோல் பாக்கிலுள்ள அர்பித் பேலஸ் ஹோட்டலில் மின்கசிவு காரணமாக அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இங்குள்ள 45 அறைகளில் 53 பேர் தங்கியிருந்தனர். இந்த விபத்தால் ஹோட்டலின் உணவகமாகச் செயல்பட்ட 4-ஆ வது மாடி முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. இதில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த போது பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. உயிர்தப்ப 3 பேர் ஹோட்டலில் இருந்து குதித்தால் உயிரிழந்துள்ளனர்  என்றார். 24 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் பல மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் ஆதேஷ் குமார் குப்தா சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார்.

உயிரிழந்தோர் விவரம்
உயிரிழந்த தமிழர்களில் ஒருவர் திருப்பூர் மாவட்டம், அவிநாசிக்கு அருகேயுள்ள வெற்றிவேல் நகரைச் சேர்ந்த சுகுமாரன் மகன் அரவிந்த் (39), மற்றொருவர் கோவை கருமத்தம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் நந்த
குமார் (33) ஆகியோராவர். திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்ட் மேன் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர்கள், நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டத்துக்காக தில்லி வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் அவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடலில் தீக்காயங்கள் இல்லை என்பதால், மூச்சுத் திணறி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது என்றனர்.


 இது தொடர்பாக ஈஸ்ட் மேன் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் உயரதிகாரி கூறுகையில் உயிரிழந்தவர்களின் உடல்களை கோயம்புத்தூருக்கு எடுத்துச் செல்வது உள்பட அனைத்துச் செலவுகளையும் நிறுவனமே பொறுப்பேற்கும். உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும் என்றனர்.
இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் தெரிவித்தனர். 
கேரளத்தைச் சேர்ந்த மூவர் சாவு: இந்த விபத்தில் சிக்கி கேரளம் எர்ணாக்குளத்தைச் சேர்ந்த நளினி அம்மா, வித்யா சாகர், ஜெயஸ்ரீ ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தில்லியை அடுத்துள்ள காஜியாபாத்தில் உறவினர்களின் 
திருமணத்தில் கலந்து கொள்ள தில்லி வந்திருந்த அவர்கள், தீ விபத்தில் சிக்கினர். இதை தில்லியில் உள்ள கேரள இல்ல அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரதமர் இரங்கல்
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் சுட்டுரைப் பக்கத்தில், தில்லி கரோல் பாக் தீவிபத்தால் பலர் உயிரிழந்துள்ளது அறிந்து கவலையடைகிறேன். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் மிக விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com