3 ஆண்டுகளில் 4,100 அரசு ஊழியர்கள் மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு: மத்திய அரசு

கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 4,123 அரசு ஊழியர்கள் மீது சிபிஐ ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது என்று பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தார். 


கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 4,123 அரசு ஊழியர்கள் மீது சிபிஐ ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது என்று பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தார். 
இதுதொடர்பாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் கூறியுள்ளதாவது: 
சிபிஐ அளித்துள்ள தகவலின்படி, கடந்த 2016, 2017 மற்றும் 2018 ஆகிய 3 ஆண்டுகளில் 4,123 அரசு ஊழியர்கள் மீது 1,767 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 900 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 59 வழக்குகளில் துறை ரீதியான நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், 89 வழக்குகள் முடிக்கப்பட்டுவிட்டன அல்லது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. 
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 900 வழக்குகளில், 19 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டன. 9 வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். 4 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஊழலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஊழல் தடுப்புச் சட்டத்தை கடுமையாக்கும் வகையில், கடந்த 2018 ஜூலை 26-ஆம் தேதி அதில் திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன என்று ஜிதேந்திர சிங் கூறினார். 
அதேபோல், இந்த ஆண்டில் ஜனவரியில் மட்டும் மொத்தமாக 67 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாக ஜிதேந்திர சிங் தெரிவித்தார். 
கடந்த 2018-ஆம் ஆண்டில் 765 வழக்குகளையும், 2017-ஆம் ஆண்டில் 940 வழக்குகளையும், 2016-ஆம் ஆண்டில் 925 வழக்குகளையும் அந்த அமைப்பு பதிவு செய்துள்ளதாக தெரிவித்த அவர், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கு விசாரணைகளின் நிலை குறித்து சிபிஐ இயக்குநருடன் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) ஒவ்வொரு மாதமும் கலந்தாலோசிப்பதாகக் கூறினார். 
4.12 லட்சம் காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு துறைகளில் கடந்த 2016-ஆம் ஆண்டில் சுமார் 4.12 லட்சம் காலிப் பணியிடங்கள் இருந்ததாக மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நிதியமைச்சகத்தின் செலவினத் துறை தரப்பு தெரிவித்த தகவலின்படி, மொத்தம் 4,12,752 காலிப் பணியிடங்கள் இருந்துள்ளன. அதில் 15,284 இடங்கள் குரூப் ஏ பிரிவிலும், 76,050 பணியிடங்கள் குரூப் பி பிரிவிலும், 3,21,418 இடங்கள் குரூப் சி பிரிவிலும் காலியாக இருந்துள்ளன.
வங்கி மோசடியில் 900 வழக்குகள்: கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வங்கி கிரெடிட்/டெபிட் அட்டைகள் மற்றும் இணையவழி வங்கிச் சேவை ஆகியவற்றின் மூலமாக ரூ.1 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பில் மோசடி செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி மொத்தம் 921 வழக்குகள் பதிவு செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com