என்னைக் குறைகூறும் மோடிக்கு ஒரு கேள்வி: விஜய் மல்லையா கேட்கிறார்!

கடன் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக என்னைக் குறை கூறும் மோடி, நான் தர ஒப்புக் கொள்ளும் பணத்தை வாங்க மறுக்கும் வங்கிகளை மட்டும் ஏன் கேள்வி கேட்பதில்லை என்று விஜய் மல்லையா கேட்டுள்ளார்.
என்னைக் குறைகூறும் மோடிக்கு ஒரு கேள்வி: விஜய் மல்லையா கேட்கிறார்!


புது தில்லி: கடன் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக என்னைக் குறை கூறும் மோடி, நான் தர ஒப்புக் கொள்ளும் பணத்தை வாங்க மறுக்கும் வங்கிகளை மட்டும் ஏன் கேள்வி கேட்பதில்லை என்று விஜய் மல்லையா கேட்டுள்ளார்.

மக்களவையின் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, வங்கிகளிடம் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கிவிட்டு ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் என்று பெயர் குறிப்பிடாமல் விஜய் மல்லையாவை சாடினார் மோடி.

இது குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் விஜய் மல்லையா, நான் வாங்கிய கடனில் ஒரு பகுதியை திருப்பித் தர தயாராக உள்ளேன். நான் கொடுக்கத் தயாராக இருக்கும் பணத்தை வாங்கிக் கொள்ள மறுக்கும் வங்கிகளை ஏன் மோடி எதுவும் கேட்பதில்லை. இதன் மூலம் கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு கொடுத்த பொதுமக்களின் பணத்தை வசூலித்துவிட்டதாக அவர் பெருமையாக சொல்லிக் கொள்ளலாமே? என்று கூறியுள்ளார்.

இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா "தேடப்படும் பொருளாதார குற்றவாளி' என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமல்படுத்திய, தலைமறைவு பொருளாதார மோசடியாளர் தடுப்பு (எஃப்.ஈ.ஓ.) சட்டத்தின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள முதல் தொழிலதிபர் மல்லையா ஆவார்.

இந்த சட்டப்பிரிவின் கீழ், மல்லையாவை குற்றவாளி என அறிவித்து அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்திருந்தது.

அந்த வழக்கில், "அமலாக்கத்துறையின் கோரிக்கை பகுதியளவு ஏற்கப்படுகிறது. எஃப்.ஈ.ஓ. சட்டத்தில் உள்ள 12(1) பிரிவின்படி, மல்லையா தேடப்படும் பொருளாதார குற்றவாளி என அறிவிக்கப்படுகிறது'' என்று உத்தரவிடப்பட்டது.


பின்னணி: வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றின் விசாரணையை எதிர்கொண்டிருந்த நிலையில் மல்லையா கடந்த 2016 மார்ச் 2-ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டன் சென்றார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டுவர மத்திய அரசு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில், மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, அவர் பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருக்கிறார்.

இருப்பினும், மல்லையா இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் பட்சத்தில், மும்பை ஆர்தர் சாலையில் உள்ள மத்திய சிறையில் அவரை அடைப்பதற்கான அறையை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

இதற்கிடையே, இந்திய வங்கிகளில் வாங்கிய கடனுக்கான அசல் தொகை முழுவதையும் செலுத்த தான் தயாராக இருப்பதாகவும், பணத்தை திருடிவிட்டதாக தன் மீது சித்தரிக்கப்பட்டுள்ள களங்கத்தை போக்க விரும்புவதாகவும் மல்லையா கூறியிருந்தார். கர்நடாக உயர்நீதிமன்றத்தில், வங்கிகளுடனான சமரச தீர்வுக்கு விருப்பம் தெரிவித்து மனு ஒன்றை மல்லையா தாக்கல் செய்துள்ளார்.

எஃப்.ஈ.ஓ. சட்டத்தின்படி ரூ.100 கோடிக்கும் அதிகமான அளவில் மோசடி செய்த வழக்கில் வாரண்ட் பிறப்பித்த பிறகும் விசாரணையை தவிர்க்கும் நோக்கில் வெளிநாடுகளில் பதுங்கிக்கொண்டு நாடு திரும்ப மறுப்பவர்களை தலைமறைவு பொருளாதார மோசடியாளர் என அறிவித்து, அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்ய இயலும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com