பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் கட்டி அணைத்தது ஏன்?: ராகுல் ருசிகர விளக்கம்   

பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் கட்டி அணைத்தது ஏன்? என்று காங்கிரஸ் சேவாதள தொண்டர்கள் மத்தியில்,கட்சித்தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.   
பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் கட்டி அணைத்தது ஏன்?: ராகுல் ருசிகர விளக்கம்   

அஜ்மீர்: பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் கட்டி அணைத்தது ஏன்? என்று காங்கிரஸ் சேவாதள தொண்டர்கள் மத்தியில்,கட்சித்தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.   

சேவாதளம் என்பது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அணியின் ஒரு பகுதியாகும். ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் நகரில் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப்பின் சேவாதள தொண்டர்களுக்கான இரண்டு நாள் கூடுகை நிகழ்ச்சியைச் சேவா தளம் வியாழனன்று தொடங்கியுள்ளது. கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் ராகுல் காந்தி ஆகியோர் இன்று பங்கேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:

ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் மக்கள் மத்தியில் வெறுப்பைதான் பரப்புகிறார்கள். ஆனால், அவர்களின் செயல்பாடுகளுக்கு மாறாக, நாம் அன்பை மட்டுமே மக்களிடத்தில் பரப்ப வேண்டும். இதுதான் நமக்கும், அவர்களுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடு.

பிரதமர் மோடி இந்த நாட்டை தனக்குத் தேவையான 15 முதல் 20 மனிதர்களுக்காக மட்டுமே நடத்துகிறார். அவரைப் பொறுத்தவரை இந்தத் தேசம் அவருக்கு ஒரு பொருள். தன்னுடைய நண்பர்களுக்கு இந்த தேசத்தை பங்குபோட்டுக் கொடுக்க மோடி விரும்புகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கோ இந்தத் தேசம் என்பது அனைவருக்கும் பொதுவான கடல் போன்றது.

மோடி தான் பேசும் பொதுக்கூட்டங்களில் கடந்த 70 ஆண்டுகளாக நாட்டில் ஒன்றுமே  நடக்கவில்லை என்று பேசுகிறார். அப்படியானால் மகாத்மா காந்தி, சர்தார் படேல், ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள்மற்றும் பலதரப்பட்ட மக்கள் என யாரும் இந்த தேசத்துக்கு என ஒன்றும் செய்வில்லையா.

வெறுப்பு என்பது அச்சுறுத்தலின் மற்றொரு வடிவம். அச்சுறுத்தல் இல்லாமல் வெறுப்பு வராது. இதுதான் மோடிக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு. பாஜக தரப்பில் வெறுப்பைக் காட்டுகிறார்கள், பயத்தை உருவாக்குகிறார்கள்.

எனவேதான் நான் நாடாளுமன்றத்தில் அவருக்கு வெறுப்புக்குப் பதிலாக கட்டி அணைத்து அன்பை அளித்தேன். வெறுப்பை அன்பால்தான் தோற்கடிக்க முடியும். நான் மோடியைக் கட்டித்தழுவும்போது எனக்கு அவரிடம் எந்தவித வெறுப்பும் இல்லை. ஆனால், அவரிடம் வெறுப்பு தெரிந்தது. அதை அவரது முகத்தில் நான் பார்த்தேன்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சேவா தளம் அமைப்பை 1927-ம் ஆண்டு தடை செய்தார்கள். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடைசெய்யவில்லை. மகாத்மா காந்தி, சர்தார் படேல் உள்ளிட்ட தலைவர்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்தார்கள். ஆனால், ஒருவர் கூட ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால், அவர்களின் தலைவரான வீரசவார்கார் 9 முறை ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கோரி உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com