மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம்: பிரதமர் மோடி

தேசத்தின் நலனுக்கு மத்தியில் மீண்டும் பெரும் பான்மை பலம் கொண்ட அரசு அமைவது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் புதன்கிழமை பேசும் பிரதமர் நரேந்திர மோடி.
மக்களவையில் புதன்கிழமை பேசும் பிரதமர் நரேந்திர மோடி.


தேசத்தின் நலனுக்கு மத்தியில் மீண்டும் பெரும் பான்மை பலம் கொண்ட அரசு அமைவது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதிநாளான புதன்கிழமை மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய மக்களிடையே சுயநம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம் பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது.
உலக அளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜோ காரணம் கிடையாது. இதற்கான பெருமை, 30 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு,  நாட்டில் அமைந்துள்ள பெரும்பான்மை பலம் கொண்ட அரசையும், நாட்டு மக்களையுமே சேரும்.
16ஆவது மக்களவையில் மொத்தம் 219 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த மசோதாக்களில், கருப்புப் பண பிரச்னை, ஊழல் ஆகியவற்றுக்கு முடிவு கட்ட கொண்டு வரப்பட்ட மசோதாக்களும் அடங்கும். 16ஆவது மக்களவையில்தான், நடைமுறையில் இல்லாத 1,400 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதே மக்களவையில்தான், பினாமி சொத்துகள் மற்றும் திவால் நிறுவனங்கள் தொடர்பான மசோதாக்கள், ஜிஎஸ்டி மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன. மக்களவையின் தீவிர பணிகளால்தான், உலக அளவில் இந்தியா 6ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. 5 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதார சக்தி என்ற நிலையை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பிக்கள், இந்த மக்களவையில்தான் உள்ளனர். பாதுகாப்பு விவகாரம் தொடர்பான கேபினெட் குழுவிலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய 2 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மக்களவையின் 17 அமர்வுகளில், 8 அமர்வுகளில் 100 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளன. இதுதவிர்த்து, மக்களவையின் ஒட்டுமொத்த செயல்பாடு 85 சதவீதமாகும்.
வங்கதேசத்துடன் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த எல்லை விவகாரம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம், பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு ஆகிய முக்கிய முடிவுகளும் இதே மக்களவையில்தான் எடுக்கப்பட்டன என்றார் பிரதமர் மோடி.
மக்களவைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை வரவில்லை. இருப்பினும், கடந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் ராகுல் காந்தி பேசியபோது தெரிவித்த சில கருத்துகள், ராகுல் காந்தி தம்மை கட்டித் தழுவியது, பிறகு கண் சிமிட்டியது உள்ளிட்டவற்றை மறைமுகமாக பிரதமர் மோடி விமர்சித்தார். அவர் கூறியதாவது:
மக்களவையில் தம்மை பேச அனுமதித்தால், நிலநடுக்கம் நேரிடும் என சிலர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மத்திய அரசின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவடையும் தருவாயில் உள்ளது. எனினும், அவர்கள் தெரிவித்த நிலநடுக்கத்தை நாங்கள் இதுவரை காணவில்லை. மக்களவையில் சிலர் காகித விமானங்களை பறக்க விட முயற்சித்தனர். ஆனால் நமது நாட்டின் வலிமையான ஜனநாயகமும், மக்களவையின் கண்ணியமும், நிலநடுக்கம் நேரிடுவதையும், காகித விமானங்களையும் அனுமதிக்கவில்லை.
இதே மக்களவையில்தான் சக உறுப்பினரை ஆரத்தழுவுவதற்கும், அவர்கள் மேலே விழுவதற்கும் இருக்கும் வித்தியாசத்தை நான் தெரிந்து கொண்டேன். கண்களை சிமிட்டும் காட்சியையும் இங்குதான் கண்டேன் என்றார் மோடி.
30 நிமிட உரையில், மக்களவையில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காக அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் எம்.பிக்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு தனது பாராட்டுகளை மோடி தெரிவித்து கொண்டார். நாட்டின் பிரதமராக தாம் மீண்டும் வர வேண்டும் என வாழ்த்து தெரிவித்த சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங்குக்கும் தனது நன்றியை மோடி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com