யாருக்கு கூடுதல் அதிகாரம்? மம்தா, சந்திரபாபுவை தொடர்ந்து நாராயணசாமி தர்னா!

புதுச்சேரியில் யாருக்கு கூடுதல் அதிகாரம் என்பதில் ஆளுநர் கிரண் பேடி- முதல்வர் நாராயணசாமி இடையே கடந்த 3 ஆண்டுகளாக பனிப்போர் நிலவி
யாருக்கு கூடுதல் அதிகாரம்? மம்தா, சந்திரபாபுவை தொடர்ந்து நாராயணசாமி தர்னா!

யாருக்கு கூடுதல் அதிகாரம் என்பதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து, நேற்று புதன்கிழமை ஆளுநர் மாளிகை வாயிலில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர். 

மாநில அரசில் மத்திய அரசு தலையிடுவதை கண்டித்து கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள் தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். 

மம்தா பானர்ஜியை தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்துகோரி தில்லியில் அம்மாநில அரசின் செலவில் 2 ரயில்களில் சென்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கும் மம்தா உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். 

புதுச்சேரியில் யாருக்கு கூடுதல் அதிகாரம் என்பதில் ஆளுநர் கிரண் பேடி- முதல்வர் நாராயணசாமி இடையே கடந்த 3 ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வருகிறது. அமைச்சரவை கூடி எடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாகவும், பொங்கல் பரிசு, ரேஷன் அரிசிக்கு பதிலாக பணம் உள்பட எதையும் நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்த ஆளுநர் கிரண் பேடி, டிஜிபி சுந்தரி நந்தாவிடம் உத்தரவிட்டார். தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையில் ஆளுநர் கிரண் பேடி தலையிட்டதாலும், தலைக்கவசம் அணியாமல் இரு வாகனங்களை ஓட்டியதாக, 3 நாள்களில் 30 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாலும், இதன்மூலம் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக மக்களின் கவனம் திரும்பும் என முதல்வர் நாராயணசாமி கருதினார்.

கடந்த சில நாள்களாக வெளியூர் பயணங்களில் இருந்த அவர் புதன்கிழமை காலை சட்டப்பேரவைக்கு வந்தார். உடனடியாக அமைச்சர்களைப் பேரவைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மு.கந்தசாமி,  எப்.ஷாஜகான்,  மல்லாடி கிருஷ்ணாராவ், ஆர்.கமலக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

தகவலறிந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் க.லட்சுமிநாராயணன்,  ஜெயமூர்த்தி,  எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி,  தீப்பாய்ந்தான்,  திமுக எம்எல்ஏ  இரா.சிவா உள்ளிட்டோரும் சட்டப்பேரவைக்கு வந்தனர்.

தொடர்ந்து முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். பிற்பகல் ஒரு மணி வரை ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு துணை நிலை ஆளுநர் உரிய மரியாதை அளிப்பதில்லை என அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து துணை நிலை ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக அதிரடியாக முடிவெடுக்கப்பட்டதை கூட்டம் முடிந்து வெளிய வந்த முதல்வர் நாராயணசாமி கருப்புச் சட்டை, வேட்டி அணிந்தார். அமைச்சர்கள் சிலரும் கருப்புச் சட்டைக்கு மாறினர். எம்எல்ஏக்கள் கருப்புத் துண்டு அணிந்தனர். பின்னர், பேரணியாக ஆளுநர் மாளிகைக்குக் சென்ற அவர்கள், வாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆளும் கட்சியினனர், ஆதரவாளர்கள் என அனைவலம் திடீர் என தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது. 

கூட்டம் அதிகரித்த நிலையில், ஷமக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் ஆளுநரே வெளியேறு! மோடியின் முகவரே வெளியேறு! சர்வாதிகார ஆளுநரே வெளியேறு!’ என தொடர் முழக்கங்களை எழுப்பி கொண்டிருந்தனர். 

ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டதால் போலீஸார் என்ன செய்வது என தெரியாமல் திணறினர். சீனியர் எஸ்.பி. அபூர்வா குப்தா தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

இதனிடையே முதல்வரை கிரண்பேடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளாதாக சீனியர் எஸ்.பி. அபூர்வாகுப்தா முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த முதல்வர், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவேன் என ஆளுநரின் அழைப்பை நிராகரித்ததுடன், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை பட்டியலை எஸ்.பி.யிடம் கொடுத்து அனுப்பினார். அடுத்த சில மணி நேர இடைவேளையில் மீண்டும் காவல்துறை அதிகாரிகள் வந்து, ராஜ்நிவாஸ் மாளிகைக்குள் வருமாறு ஆளுநர் சார்பில் அழைப்பு விடுத்தனர். இதனையும் ஏற்க மறுத்த முதல்வர், ஆளுநரை வெளியே வந்து பேசச் சொல்லுங்கள் என கண்டிப்புடன் கூறி அனுப்பியதுடன், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை, எத்தனை நாளானாலும் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று கூறி அனுப்பிவிட்டார். 

இதையடுத்து இதவரை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் இருந்து சாதகமான பதில் வராததால் 2வது நாளாக காலவரையற்ற போராட்டமாக மாறியுள்ளது.

முதல்வரின் திடீர் போராட்டத்துக்கு ஆதரவாக காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்து ஆளுநர் மாளிகை முன்பு குவிந்துள்ளதால் பரபரப்பும், பதற்றமான சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரே தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மத்திய பாதுகாப்பு படையை புதுச்சேரிக்கு அனுப்புமாறு உள்துறை அமைச்சகத்துக்கு கிரண்பேடி கோரிக்கை விடுத்துள்ளார். துணை நிலை ஆளுநரின் கோரிக்கையை ஏற்று சென்னை, நெய்வேலியில் இருந்து வந்த அதிவிரைவு அதிரடிப்படை மற்றும் தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், அமைச்சரவை கூடி எடுக்கப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாகவும், பொங்கல் பரிசு, ரேஷன் அரிசிக்கு பதிலாக பணம் உள்பட எதையும் நிறைவேற்ற முடியவில்லை.

புதுச்சேரியில் தலைகவசம் அணியும் சட்டத்தை படிப்படியாக அமல்படுத்தலாம் தெரிவித்திருந்த நிலையில், ஒரே நாளில் தலைகவசம் கட்டாயம் என தன்னிச்சையாக உத்தரவு போடுகிறார். இலவச அரிசி போட கோப்பு அனுப்பினால் பணமாக போடுங்கள் என அரசு நிர்வாகம்  முழுவதும் சர்வாதிகாரம் செய்து, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை செயல்பட விடாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்வதுடன், சர்வாதிகாரமாக செயல்பட்டு வருகிறார். 

எனவே, கிரண்பேடியின் அராஜகத்தை மற்ற மாநிலத்தவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்றும் ஆளுநர் பதவியில் இருக்கவே தகுதியற்றவர் கிரண்பேடி என்று முதல்வர் நாராயணசாமி கூறினார். 

யாருக்கு கூடுதல் அதிகாரம் என்பதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து, அம்மாநில முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தர்னாவில் ஈடுபட்டு வருவதால் யாருக்கு கூடுதல் அதிகாரம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com