பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட இணக்கமான நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்தது இந்தியா

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக, இதுவரை பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த இணக்கமான நாடு என்ற சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட இணக்கமான நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்தது இந்தியா


புது தில்லி: புல்வாமா தாக்குதல் எதிரொலியாக, இதுவரை பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த இணக்கமான நாடு என்ற சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

புது தில்லியில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, நமது அண்டை நாட்டை, உலக நாடுகளிடம் இருந்து தனிப்படுத்தும் பணிகளும் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், இதுவரை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கி வந்த இணக்கமான நாடு என்ற அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது. இது வணிக ரீதியாக ஒரு நாட்டுக்கு மற்றொரு நாடு வழங்கும் அந்தஸ்தாகும். 1996ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்தியா இந்த அந்தஸ்தை வழங்கியது.

புல்வாமா தாக்குதலுக்கு, நமது எதிரிகள் மிகப்பெரிய விலையைக் கொடுப்பார்கள் என்று அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார்.

இதில்லாமல், தூதரகங்கள் மூலமாக, பாகிஸ்தானை தனிப்படுத்துவதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்படும். இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் கை இருப்பதை உறுதி செய்யும் முக்கிய ஆதாரம் உள்ளது. இதற்காக பாகிஸ்தான் மிகப்பெரிய விலையைக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

ஜம்முவில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (சிஆர்பிஎஃப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 வாகனங்களில் ஸ்ரீநகரை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மிக சக்தி வாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஓட்டி வந்து, பேருந்து ஒன்றின் மீது மோதி வெடிக்கச் செய்தான்.  இதில் அந்தப் பேருந்து உருக்குலைந்தது. வீரர்கள் பயணம் செய்த வேறு சில பேருந்துகளும் பாதிப்படைந்தன.

இந்தக் கொடிய தாக்குதலில் 43 வீரர்கள் பலியாகினர். காயமடைந்த 36 வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்துக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முஹம்மது ஹஸன் சார்பில், ஜிஎன்எஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com