காஷ்மீரில் தொடரும் தாக்குதல்களும்... இதற்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் விவரம்

ஜம்முவில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (சிஆர்பிஎஃப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 வாகனங்களில் ஸ்ரீநகரை நோக்கி வியாழக்கிழமை சென்று
காஷ்மீரில் தொடரும் தாக்குதல்களும்... இதற்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் விவரம்

 
ஜம்முவில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (சிஆர்பிஎஃப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 வாகனங்களில் ஸ்ரீநகரை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மிக சக்தி வாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஓட்டி வந்து, பேருந்து ஒன்றின் மீது மோதி வெடிக்கச் செய்தார்.  இதில் அந்தப் பேருந்து  உருக்குலைந்தது. வீரர்கள் பயணம் செய்த வேறு சில பேருந்துகளும் பாதிப்படைந்தன.

இந்தக் கொடிய தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர். காயமடைந்த 36 வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக செய்தித்தொடர்பாளர் முஹம்மது ஹஸன் சார்பில், ஜிஎன்எஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு உரியில் உள்ள ராணுவ முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் பலியான சம்பவங்களுக்கு பிறகு, மோசமான பயங்கரவாத தாக்குதல் இதுதான் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்திய வீரர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்கிறது.

1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்: 

* 1999, நவ. 3: ஸ்ரீநகர் பதாமி பாஹ் பகுதியில் ராணுவத்தினர் மீதான தற்கொலைப்படை தாக்குதலில் 10 வீரர்கள் பலி.

* 2000, ஏப். 19: முதல் முறையாக நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 2 வீரர்கள் பலி.

* 2000, ஆக. 10: ஸ்ரீநகரில் சாலையில் நின்ற பாதுகாப்பு படை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பலி.

* 2001, அக். 1: ஸ்ரீநகரில் உள்ள பழைய சட்டப்பேரவை வளாகத்தின் வெளியே தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 38 பேர் பலி.

* 2001, நவ. 17: ரம்பானில் பாதுகாப்பு படை மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* 2002, மே. 14: கலுஷாக் ராணுவ குடியிருப்பில் 3 தீவிரவாதிகள் நடந்திய தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் பலி. இதில் பெரும்பாலானவர்கள் வீரர்களின் குடும்பத்தினர்.

* 2003, ஜூன். 28: சஜ்வான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் அதிகாரி உட்பட 12 வீரர்கள் பலி. 

* 2003, ஜூலை 22: ஜம்முவில் ராணுவ முகாம் மீதான தாக்குதலில் 8 வீரர்கள் பலி.

* 2004, ஏப். 8: பாரமுல்லா மாவட்டம் உரியில், கையெறி குண்டுகளை வீசி நடத்திய தீவிரவாத தாக்குதலில் 11 பேர் பலி.

* 2005, ஜூன் 24: ஸ்ரீநகர் புறவழிச் சாலையில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 வீரர்கள் பலி.

* 2005, நவ. 2: அப்போதைய காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையத்தின் குடியிருப்பு அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 வீர்கள், பொதுமக்கள் 6 பேர் பலி.

* 2006 அக். 5: ஸ்ரீநகரில் நடந்த தாக்குதலில் 3 போலீசார், 2 சி.ஆர்.பி.எப் என 5 பேர் பலி.

* 2008, ஜூலை 19: ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலி.

* 2013 மார்ச் 31: ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப்., முகாம் மீதான தாக்குதலில் 5 பேர் பலி.

* 2013 ஜூன் 24: ஸ்ரீநகரில் ராணுவ வாகனம் மீது நடந்த தாக்குதலில் 8 பேர் பலி.

* 2014, டிச. 5: உரியில் உள்ள மொக்ரா ராணுவ முகாம் மீது 6 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலி.

* 2016, ஜூன் 3: பாம்போரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் பலி.

* 2016 ஜூன் 25: ஸ்ரீநகரில் ராணுவ வாகனம் மீது நடந்த தாக்குதலில் 8 சிஆர்பிஎப் வீரர்கள் பலி.

* 2016 செப்., 18: பாரமுல்லா மாவட்டம் உரி ராணுவ முகாம் மீது 4 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் பலி. தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்துதான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. 

* 2016 நவ. 29: ஜம்முவில் ராணுவ முகாம் மீது நடந்தி தாக்குதலில் 7 பேர் பலி.

* 2019 பிப். 14: புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வாகனம் மீது நடந்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 பேர் பலி. காயமடைந்த 36 வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

கடந்த 2016 ஆம் ஆண்டு உரியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் நடத்தப்பட்ட மோசமான பயங்கரவாத தாக்குதல் இதுதான் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com