ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்த தடை செய்யப்பட்ட பாடல்: அடுத்த மாதம் வெளியீடு

கடந்த 1919-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து வெளியான தடை செய்யப்பட்ட பஞ்சாபி மொழி பாடல், தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அடுத்த மாதம் வெளியாகிறது.


கடந்த 1919-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து வெளியான தடை செய்யப்பட்ட பஞ்சாபி மொழி பாடல், தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அடுத்த மாதம் வெளியாகிறது.
ஆங்கிலேய ஆட்சியில் கடந்த 1919-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ரெளலட் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் நகரில் உள்ள பூங்காவில் அதே ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி மக்கள் கூடியிருந்தனர். அப்போது அந்த இடத்துக்கு வந்த ராணுவ அதிகாரி ஜெனரல் டயர், எவ்வித எச்சரிக்கையுமின்றி கூட்டத்தினரை நோக்கி சுடுமாறு சிப்பாய்களுக்கு உத்தரவிட்டார். அதையடுத்து மக்களை நோக்கி வீரர்கள் சரமாரியாக சுட்டனர்.  இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின்போது அந்த இடத்தில் இருந்து உயிர்பிழைத்தவர் பஞ்சாபைச் சேர்ந்த நானக் சிங். 
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை நேரில் கண்ட அவர், அதுகுறித்து பஞ்சாபி மொழியில் பாடல் ஒன்றை இயற்றினார். அந்த பாடலில் ஆங்கிலேயர்கள் குறித்து விமர்சித்து  அவர் எழுதியிருந்தார். அதையடுத்து அந்த பாடலுக்கு ஆங்கிலேயர்கள் தடை விதித்தனர். நாளடைவில் அந்த பாடல் எழுதப்பட்ட புத்தகமும் காணாமல் போனது.
இந்நிலையில், ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 100 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில்,  நானக்சிங்கின் பேரனும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதருமான நவ்தீப் சிங் சூரி அந்த பாடலை தற்போது தேடி எடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த பாடல் அடங்கிய புத்தகம் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. இந்த பாடல் பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளிவருகிறது. அந்த பாடல் அடங்கிய புத்தகத்தில், ரெளலட் சட்டத்தை இயற்றியவரின் வம்சாவளியினர் ஜஸ்டின் ரெளலட், நவ்தீப் சிங் சூரி உள்ளிட்டோரின் கட்டுரைகளும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 1897-ஆம் ஆண்டு பிறந்த நானக் சிங், பஞ்சாபி மொழியில் 50-க்கும் புத்தகங்களை இயற்றியுள்ளார். சிறந்த படைப்புக்காக கடந்த 1962-ஆம் ஆண்டு  அவர் சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ளார். கடந்த  1971-ஆம் ஆண்டு அவர் காலமானார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com