தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அனுமதி: விவரங்களை வெளியிட உள்துறை அமைச்சகம் மறுப்பு

நாட்டு மக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க விசாரணை அமைப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது தொடர்பான விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.


நாட்டு மக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க விசாரணை அமைப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது தொடர்பான விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு அளித்தார். அந்த மனுவில் அவர், கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் கடந்த 2018-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதிகள் குறித்த தகவல்களைக் கோரியிருந்தார். அதேபோல், எத்தனை முறை விசாரணை அமைப்புகள் அனுமதி கோரியிருந்தன, மத்திய உள்துறை அமைச்சகம் எத்தனை முறை அனுமதி தர மறுத்தது ஆகிய தகவல்களையும் அவர் கோரியிருந்தார்.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க கொடுக்கப்பட்ட அனுமதிகள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது; அவ்வாறு வெளியிடுவது நாட்டின் நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் விசாரணை அமைப்புகள் மேற்கொண்டுள்ள விசாரணைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். விசாரணை அதிகாரிகளுக்கும் இதனால் ஆபத்து ஏற்படக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்படும் விவரங்களை அளிக்காமல் மறுக்கும்போது, அதற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். தகவல் உரிமைச் சட்டத்திலுள்ள 8(1)(ஏ) பிரிவு, 8(1)(ஜி) பிரிவு, 8(1)(ஹெச்) பிரிவு ஆகிய 3 பிரிவுகளில், எந்த காரணத்தையும் தெரிவிக்காமல், தகவல்களை அளிக்க மறுப்புத் தெரிவிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த 3 பிரிவுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது சுட்டிக்காட்டியுள்ளது.
8(1)(ஏ) பிரிவில், தேசத்தின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு, இறையாண்மை, நாட்டின் பொருளாதார மற்றும் அறிவியல் நலன்கள், வெளிநாடுகளுடனான  உறவு ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட தகவலை வெளியிடுவதால் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதினால், அந்த தகவலை வெளியிட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 8(1)(ஜி) பிரிவில், குறிப்பிட்ட தகவலை வெளியிடுவதால், தனிநபர் உயிருக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று கருதினால், அந்த தகவலை வெளியிட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 8(1)(ஹெச்) பிரிவில், வழக்குத் தொடர்பான விசாரணையில் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதினால், அந்தத் தகவலை வெளியிட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சிஐசி ஆணையர் கண்டனம்: தகவல் உரிமைச் சட்டத்திலுள்ள 8(1)(ஏ) பிரிவு, 8(1)(ஜி) பிரிவு, 8(1)(ஹெச்) பிரிவு ஆகிய 3 பிரிவுகளை சுட்டிக்காட்டி, மனுதாரர் கோரிய தகவல்களை வெளியிட மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்திருப்பதற்கு, மத்திய தகவல் ஆணைய (சிஐசி) முன்னாள் ஆணையர் சைலேஷ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.  முன்னதாக, தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பான விவரங்களை கோரி மனுதாரர் ஒருவர் தொடுத்த மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், தொலைபேசி நிறுவனத்திடம் இருந்து அந்த விவரங்களை பெற்று, மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்துக்கு (டிராய்) உத்தரவிட்டது. இதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், சிஐசியின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com