வந்தே பாரத் விரைவு ரயில்: இன்று தொடங்கி வைக்கிறார் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  முதல் அதிவிரைவு ரயிலான  வந்தே பாரத் ரயிலை,  பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (பிப். 15) தில்லி ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 
வந்தே பாரத் விரைவு ரயில்: இன்று தொடங்கி வைக்கிறார் மோடி


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  முதல் அதிவிரைவு ரயிலான  வந்தே பாரத் ரயிலை,  பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (பிப். 15) தில்லி ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயிலை, தில்லி ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்ற உள்ளார். ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் அந்த ரயிலில் பயணிக்க உள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.
தில்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசிக்கு வெள்ளிக்கிழமை இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. இடையே, கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ்(அலாகாபாத்) ரயில் நிலையங்களில்  சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதற்காக அந்த ரயில் நிலையங்களில்  40 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்படவுள்ளது. அதையும் சேர்த்து 9 மணி நேரம், 40 நிமிடத்துக்குள் தில்லியில் இருந்து வாராணசிக்கு வந்தே பாரத் விரைவு ரயில் செல்லவுள்ளது. 
ரயில் 18 என்று அழைக்கப்பட்டு வந்த இந்த விரைவு ரயில், சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்) தயாரிக்கப்பட்டதாகும்.  இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட  முதல் விரைவு ரயில் என்ற பெருமை இதற்கு உண்டு. 
அண்மையில், இந்த ரயிலுக்கு வந்தே பாரத் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பெயர் சூட்டினார். 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயில், சோதனை ஓட்டத்தின்போது சுமார் 180 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் சென்றது. 30 ஆண்டுகால பழைமையான சதாப்தி விரைவு ரயிலுக்கு மாற்றாக இந்த ரயில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
ரயிலின் சிறப்பம்சங்கள்: 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 1,128 பயணிகள் பயணிக்கலாம். அனைத்து பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளின் பொழுதுபோக்குக்காக, அனைத்து பெட்டிகளிலும் வை-பை வசதி  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலில் அனைத்து கழிப்பறைகளும், பயோ-டாய்லெட் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு எளிதாக இருக்கும் வகையில், ஒவ்வொரு பெட்டியிலும் ரயில்வே உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. 
ம.பி.யில் பிரசாரம் இன்று தொடக்கம்: மத்திய பிரதேச மாநிலத்தில், வரும் மக்களவைத் தேர்தலுக்கான  பிரசாரத்தை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார். ஹோஷாங்காபாத் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திலும், அதையடுத்து தார் பகுதியில்  நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திலும் மோடி உரையாற்ற உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com