சர்வதேச தலைவர்கள் கண்டனம்: இந்தியாவுக்கு துணை நிற்போம் என உறுதி

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு ரஷியா, அமெரிக்கா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும்


புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு ரஷியா, அமெரிக்கா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் இந்தியாவுக்கு துணை நிற்போம் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், வெள்ளிக்கிழமை அனுப்பிய செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையினர் பலியான நிகழ்வு தொடர்பாக எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த கொடும் குற்றத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்தத் தாக்குதலை நடத்திய சதியாளர்கள், அதற்கு உதவியவர்கள் அனைவரும் தக்க சமயத்தில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. 
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பை பலப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ரஷியாவில் உள்ள இந்தியர்களுடன் நாங்கள் ஆறுதலை பகிர்ந்து கொள்கிறோம் என்று புதின் கூறியுள்ளார்.
அமெரிக்கா எச்சரிக்கை: பாகிஸ்தான் மண்ணில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கான ஆதரவையும், அவர்களுக்கு புகலிடம் அழிப்பதையும் அந்நாட்டு அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு செயலாளர் சரா சாண்டர்ஸ் எச்சரித்துள்ளார். பயங்கரவாதத் தடுப்பில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
சீனா அதிர்ச்சி:  சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் ஸுயாங், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தியாவில் நடத்தப்பட்டுள்ள தற்கொலைத் தாக்குதலை சீனா கவனத்தில் கொண்டுள்ளது.  இந்தத் தாக்குதல் குறித்து நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளோம். தாக்குதலில் மறைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இலங்கை கண்டனம்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு மாபெரும் தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த அந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியப் பிரதமர் மோடிக்கும், பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
வங்கதேசம் ஆதரவு: பயங்கரவாதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை எதிர்ப்பது என்ற முடிவில் வங்கதேசம் உறுதியாக இருக்கிறது. அனைத்து விதமான பயங்கரவாத நடவடிக்கைகளையும் முற்றாக நிராகரிக்கிறோம். பயங்கரவாதத்தை முறியடிக்கும் நடவடிக்கையில் இந்தியா உள்பட சர்வதேச சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு வங்கதேசம் ஆதரவளிக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசினா உறுதியளித்துள்ளார்.
ஆஸ்திரேலியா இரங்கல்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைக் குறிப்பிட்டு, சுட்டுரையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய நினைவெல்லாம் இந்தியப் பிரதமர் மோடியுடனும், இந்திய மக்களுடனும் மட்டுமே இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற நாடுகள்....: பயங்கரவாதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை சமரசமின்றி கண்டிக்கிறோம் என்றும், பயங்கரவாதிகளின் கொடுஞ் செயல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் நேபாளம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது எனக் கூறியுள்ள சவூதி அரேபியா, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்போம் என்று தெரிவித்துள்ளது.
பூடான், பிரான்ஸ், மாலத்தீவு, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com