பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்குத் தொடர்பு?: அமெரிக்க நிபுணர்கள் சந்தேகம்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடர்பு இருக்கலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை நிபுணர்கள்


காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடர்பு இருக்கலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை நிபுணர்கள் சந்தேகின்றனர்.
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வில் பணியாற்றியவரும், ஆசிய விவகாரங்களில் நிபுணருமான புரூஸ் ரீடெல் இதுகுறித்து கூறியதாவது:
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு வெளிப்படையாகப் பொறுப்பேற்றுள்ளது.
இது, அந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ அமைப்புக்கு உள்ள தொடர்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்களுக்கு ஐஎஸ்ஐ அமைப்பு உதவிகள் அளித்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
பாகிஸ்தானுடன் நேரடித் தொடர்புடைய இந்தத் தாக்குதல், இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் முதல் முறையாக பிரதமர் இம்ரான் கானுக்கு சவாலாக அமைந்துள்ளது என்றார் 
அவர்.
இதுகுறித்து ஒபாமா அரசில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரியாகப் பணியாற்றிய அனிஷ் கோயல் கூறியதாவது:
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு புல்வாமா தாக்குதலுக்கு உடனடியாகப் பொறுப்பேற்றிருப்பது, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அந்த அமைப்பால் தொடர்ந்து பதற்றம் அதிகரிக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை நிபுணர் மொயீது யூசுஃப் கூறுகையில், பயங்கரவாத சக்திகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதைத் தடுப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வியடைந்ததை புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நிரூபித்துள்ளது.
இந்தத் தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடி சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால், இந்தியா மேற்கொள்ளும் பதிலடி நடவடிக்கைகளை பாகிஸ்தானும் சகித்துக் கொள்ளாது. 
எனவே, இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com