காஷ்மீரைச் சேர்ந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது

புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று
காஷ்மீரைச் சேர்ந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது

புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் ஆர்ப்பாட்டங்களும், வேலை நிறுத்தப் போராட்டங்களும் நடைபெற்றன. மேலும், வெளிமாநிலங்களில் வசிக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் செய்திகள் பரவின.
 இதைத் தொடர்ந்து, மெஹபூபா முஃப்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை பதிவிட்டதாவது:
 புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் வலியை அனைவரும் உணர வேண்டும். ஆனால், இந்தத் தாக்குதலை அடிப்படையாக வைத்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மக்களைத் துன்புறுத்தும் நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது. ஒரு சில பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலுக்காக அப்பாவி மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
 இந்தச் சமயத்தில், மதத்தின் அடிப்படையிலும், அடையாளங்களின் அடிப்படையிலும் நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹிந்து மற்றும் முஸ்லிம் என்பதையும், ஜம்மு மற்றும் காஷ்மீர் என்பதையும் அடிப்படையாக வைத்து நம்மிடையே ஒரு சிலர் பகைமையை வளர்க்கின்றனர். இவற்றை நாம் அனுமதிக்கக் கூடாது என்று அவர் பதிவிட்டார்.
 அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏமாற்றமளிக்கிறது-ஒமர் அப்துல்லா: புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, தில்லியில் மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏமாற்றமளிப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
 இது தொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்முவில் வன்முறை ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கும் ஆபத்து உள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இந்த விவகாரத்தில் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது' என்று தெரிவித்திருந்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com