காஷ்மீர்: பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவு; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

"பயங்கரவாதத்துக்கு எதிரான போரிலும், தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் பணியிலும் பாதுகாப்புப் படையினருக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்' என்று
காஷ்மீர்: பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவு; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

"பயங்கரவாதத்துக்கு எதிரான போரிலும், தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் பணியிலும் பாதுகாப்புப் படையினருக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்' என்று தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
 ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவர் வெடிபொருள் நிரப்பிய காரை சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதச் செய்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தியதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
 பரபரப்பான இந்தச் சூழலில், தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும், அதையடுத்து மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதான அரசியல் கட்சிகளுக்கு விளக்கும் வகையில், தில்லியில் சனிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்தக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. அதில், பிரதான கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
 குறிப்பாக, காங்கிரஸின் குலாம் நபி ஆஸாத், ஆனந்த் சர்மா, ஜோதிராதித்ய சிந்தியா, திரிணமூல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய, தெலங்கானா ராஷ்டிர சமிதியின் ஜிதேந்திர ரெட்டி, தேசிய மாநாட்டுக் கட்சியின் ஃபரூக் அப்துல்லா, லோக் ஜன சக்தியின் ராம் விலாஸ் பாஸ்வான், அகாலி தளத்தின் நரேஷ் குஜ்ரால், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் உபேந்திர குஷ்வாஹா, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு அளிக்கப்படும் ஆதரவுக்கும் கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 அந்த கண்டனத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்ததாவது:
 பயங்கரவாதத் தாக்குதல் போன்ற சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா உறுதித்தன்மையை வெளிப்படுத்தி வருகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் இருந்து மீண்டுவரும் திறனையும் நமது தேசம் கொண்டுள்ளது. இத்தகைய சவால்களுக்கு எதிராகப் போராடும் உறுதித் தன்மையை ஒட்டுமொத்த தேசமும் ஒருமித்த குரலில் வெளிப்படுத்துகிறது.
 இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதிலும், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவதிலும் பாதுகாப்புப் படையினருக்கு பக்கபலமாக இருந்து, முழு ஆதரவளிக்கிறோம் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
 இந்தத் தீர்மானத்தில் எந்தவொரு இடத்திலும் பாகிஸ்தானின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா பல ஆண்டுகளாக சந்தித்து வருவதாகவும், அண்டை நாடானது பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும் அந்தத் தீர்மானத்தில் பாகிஸ்தான் குறித்து மறைமுகமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
 தீர்மானத்தில் திருத்தம்: கூட்டத்தில் மத்திய அரசு பகிர்ந்துகொண்ட வரைவுத் தீர்மானத்தில், "பாதுகாப்புப் படையினருக்கும், மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் அனைத்துக் கட்சிகளும் துணை நிற்கும்' என்ற வார்த்தை இருந்ததாகவும், பின்னர் எதிர்க்கட்சிகளின் பரிந்துரையின் பேரில் இறுதித் தீர்மானத்திலிருந்து, "மத்திய மற்றும் மாநில அரசுகள்' என்ற வார்த்தை நீக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
 "ராணுவத்துக்கு முழு சுதந்திரம்': முன்னதாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய ராஜ்நாத் சிங், புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து கட்சிகளிடையே எடுத்துரைத்தார்.
 அவர் மேலும் பேசுகையில், "பயங்கரவாதத்துக்கு எதிரான சண்டையை தகுந்த முறையில் முடிவுக்குக் கொண்டுவர அரசு உறுதிபூண்டுள்ளது. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் போகாது. ஜம்மு காஷ்மீரில் அமைதியை விரும்பும் அந்த மாநில மக்கள் நம் பக்கம் இருக்கின்றனர். ஆனால், ஒரு சில சமூக விரோத சக்திகளே பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதக் குழுக்களுக்கு துணை போகின்றன.
 நமது பாதுகாப்புப் படையினர் அதீத மன உறுதி கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.
 காங்கிரஸ் வலியுறுத்தல்: புல்வாமா தாக்குதல் விவகாரம் தொடர்பாக, தேசிய மற்றும் மாநில அளவிலான அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
 எல்லையில் குண்டு வெடிப்பு: ராணுவ அதிகாரி பலி
 ஜம்மு, பிப். 16: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ரஜெளரி மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்; ராணுவ வீரர் காயமடைந்தார்.
 ரஜெளரி மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ அதிகாரியும், ராணுவ வீரர் ஒருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இந்திய எல்லைப்பகுதியில் தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் ராணுவ அதிகாரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராணுவ வீரர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
 இந்நிலையில், அதே பகுதியில் இரண்டாவது தாக்குதல் நடைபெற்றிருப்பது அப்பகுதியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com