நாட்டின் பாதுகாப்பு நிலவரம்: ராஜ்நாத் சிங் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை அடுத்து, நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலவரம்: ராஜ்நாத் சிங் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை அடுத்து, நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
 புல்வாமாவில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர், பாதுகாப்புப் படையினர் மீது வியாழக்கிழமை நிகழ்த்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரிலும், நாட்டிலும் நிலவும் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
 இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
 இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதி உள்ளிட்ட நாட்டின் முக்கியமான பகுதிகளில் உள்ள பாதுகாப்பு நிலை குறித்து உயரதிகாரிகள் ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துரைத்தனர். ஜம்மு-காஷ்மீரிலும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த அமைப்புகள் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடா வண்ணம் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
 காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார் என்றனர்.
 இந்த ஆய்வுக் கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலர் ராஜீவ் கெüபா, புலனாய்வுத் துறை (ஐ.பி.) தலைமை இயக்குநர் ராஜீவ் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 மாநிலங்களுக்குச் சுற்றறிக்கை: ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில் படித்து வரும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள், தங்களைச் சிலர் துன்புறுத்தியதாகவும், தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியேற்றியதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும், மற்ற மாநிலங்களில் வசித்து வரும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசுக்குத் தகவல் கிடைத்தது. இவை குறித்து தில்லியில் மத்திய அரசு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, மற்ற மாநிலங்களிலுள்ள ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
 இதைத் தொடர்ந்து, அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com