பாகிஸ்தான் பொருள்களுக்கான இறக்குமதி வரி 200%

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் இறக்குமதி வரியை 200 சதவீதமாக இந்திய அரசு உயர்த்தியுள்ளது.
பாகிஸ்தான் பொருள்களுக்கான இறக்குமதி வரி 200%

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் இறக்குமதி வரியை 200 சதவீதமாக இந்திய அரசு உயர்த்தியுள்ளது.
 இந்திய அரசின் இந்த முடிவால், பாகிஸ்தானுக்கு ரூ.3,482.3 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தனது சுட்டுரை பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதவாது:
 ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்த "நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு' என்ற சிறப்பு அந்தஸ்தை இந்தியா வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் அடிப்படை சுங்க வரி 200 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அந்தப் பதிவில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.
 பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பழங்கள், சிமென்ட், பெட்ரோலியப் பொருள்கள், கச்சா தாதுக்கள், பருத்தி, ரப்பர் பொருள்கள், மதுபான வகைகள், மருத்துவ உபகரணங்கள், பிளாஸ்டிக் கச்சா பொருள்கள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றில் பழங்கள், சிமென்ட் ஆகியவை அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
 பழங்களுக்கு 30 முதல் 50 சதவீதம் வரை தற்போது இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதேபோல், சிமென்ட்டுக்கு 7.5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
 இந்நிலையில், இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியிருப்பது, பாகிஸ்தானிடம் இருந்து இறக்குமதி செய்வதற்கு கிட்டத்தட்ட தடை விதித்ததற்கு நிகரானது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com