புல்வாமா தாக்குதல் தொடர்புடையவர்களுக்கு உரிய நேரத்தில் தண்டனை: பிரதமர் மோடி உறுதி

ஜம்மு-காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உரிய நேரத்தில் தண்டனை அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
புல்வாமா தாக்குதல் தொடர்புடையவர்களுக்கு உரிய நேரத்தில் தண்டனை: பிரதமர் மோடி உறுதி

ஜம்மு-காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உரிய நேரத்தில் தண்டனை அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
 மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகை தந்த அவர், அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
 இந்தியாவிடம் இருந்த பிரிந்த பிறகு, பயங்கரவாதச் செயல்களை ஊக்குவித்து வந்த ஒரு தேசம் (பாகிஸ்தான்), தற்போது பயங்கரவாதத்தின் மறு பெயராக மாறிவிட்டது.
 ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலால் 40 சிஆர்பிஎஃப் வீரர்களை பறிகொடுத்திருக்கிறோம். இந்த சம்பவத்தால், இந்த தேசமே வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறது. வீரர்களின் தியாகம் வீண்போகாது. தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களைத் தண்டிப்பதற்கு பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த முறையில் தண்டிக்க வேண்டும் என்பதை நமது ராணுவம் முடிவு செய்யும்.
 இந்த நேரத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நம்பிக்கை வைத்து, நாட்டு மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினரின் வலியையும், வேதனையும் நாம் அனைவரும் உணர்கிறோம். அவர்களின் கோபத்தையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம் என்றார் மோடி.
 கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, யவத்மால் மாவட்டத்துக்கு வந்தபோது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர் நினைவுகூர்ந்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தாம் பாடுபட்டதையும் அவர் குறிப்பிட்டார்.
 மத்திய அரசின் திட்டங்களை சுட்டிக் காட்டி அவர் மேலும் பேசியதாவது:
 பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் 1.25 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படும். அந்தத் தொகை மூன்று தவணைகளாக, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
 பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 கடந்த மக்களவைத் தேர்லில் மக்கள் வாக்களித்து, மத்தியில் வலிமையான அரசை ஏற்படுத்தியதால், மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற முடிந்தது. மக்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால், தொடங்கிய இடத்திலேயே இருந்திருப்போம்.
 அதேபோல், மத்தியில் மீண்டும் வலிமையான அரசு அமைவதற்கு, முதன்மை சேவகனான என்னை மக்கள் ஆசிர்வதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
 நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஹன்ஸ்ராஜ் அஹீர், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 2 நிமிடம் அஞ்சலி: நிகழ்ச்சியின் தொடக்கத்தில், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 2 நிமிடம் மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது.
 புதிய திட்டங்கள் தொடக்கம்: நிகழ்ச்சியில், பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அஜ்னி (நாகபுரி)- புணே இடையே ரயில் சேவையை காணொலி முறையில் அவர் தொடங்கி வைத்தார். ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு காசோலைகளை மோடி வழங்கினார்.
 பயங்கரவாதிகள் தப்ப முடியாது- மோடி: அதைத் தொடர்ந்து, துலே மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பேசுகையில், புதிய இந்தியாவின் கொள்கைப் படி, காஷ்மீரில் ராணுவ வீரர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியவர்கள் தப்ப முடியாது என்றார். அவர் மேலும் கூறியதாவது:
 உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினரின் கண்களில் ஈரமும், கோபமும் நிறைந்துள்ள இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறேன். துணிச்சல் மிக்க வீரர்களைப் பெற்றெடுத்த அன்னையர்களுக்கு தலை வணங்குகிறேன். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும்.
 புதிய நடைமுறைகள், புதிய கொள்கைகள் ஆகியவற்றுடன் இந்தியா உருவெடுத்து வருகிறது. புதிய இந்தியாவில், நமது ராணுவ வீரர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியவர்கள் அல்லது தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகளின் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்தவர்கள் யாரும் தப்ப முடியாது. அவர்களை நிம்மதியாக இருக்க விடமாட்டோம் என்றார் மோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com