கூட்டணி இறுதியாவதில் இழுபறியா? அமித் ஷா இன்று சென்னை வருகை ரத்து

அதிமுகவுடனான கூட்டணியை இறுதி செய்யும் வகையில் பாஜக தேசிய தலைவர் இன்று காலை சென்னை வருவதாக தகவல்கள் வெளியான
கூட்டணி இறுதியாவதில் இழுபறியா? அமித் ஷா இன்று சென்னை வருகை ரத்து


அதிமுகவுடனான கூட்டணியை இறுதி செய்யும் வகையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று காலை சென்னை வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வந்தது. கடந்த சில மாதங்களாக திரைமறைவில் அதிமுக - பாஜக தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். 

கடந்த 14 ஆம் தேதி திடீரென சென்னை வந்த மத்திய ரயில்வே அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல், அதிமுக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோருடன் 3 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

பியூஷ் கோயல் நடத்திய பேச்சுவார்த்தையின்போது உடன் இருந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர், அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அவருடன் பியூஷ் கோயலும் இன்று காலை 10.45 மணியளவில் சென்னை வர இருப்பதாக அக்கட்சியின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தெரிவித்திருந்தார். 

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக சார்பில் மெகா கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும். உறுதியாக ஓரிரு தினங்களில் உங்கள் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் நல்ல முறையில் அந்த அறிவிப்பு அமையும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அமித் ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை வருவதாக இருந்த பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு அமித் ஷா தற்போது மகாராஷ்டிராவில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். 

அமித் ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கா முன்பாக கூட்டணியை அறிவிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வந்த அமித் ஷாவின் கூட்டணி இறுதியாவதிலான பேச்சுவார்த்தையில் ஏதாவது இழுபறியா என்ற சந்தேகம் தமிழக அரசியல் தலைவர்களிடையே எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com