சாரதா நிதி நிறுவன மோசடி: சிபிஐ விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை: காவல் துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் தகவல்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், சிபிஐ விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என்று மேற்கு வங்க காவல் துறைத் தலைமை இயக்குநர், கொல்கத்தா நகர காவல் ஆணையர் உள்ளிட்டோர்
சாரதா நிதி நிறுவன மோசடி: சிபிஐ விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை: காவல் துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் தகவல்


சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், சிபிஐ விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என்று மேற்கு வங்க காவல் துறைத் தலைமை இயக்குநர், கொல்கத்தா நகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா நகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில முக்கிய ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியது. 
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜீவ் குமாருக்கு சிபிஐ பலமுறை அழைப்பாணை அனுப்பியது. ஆனால், சிபிஐயின் ஆணையை அவர் தொடர்ந்து நிராகரித்ததாகக் கூறி, அவரிடம் விசாரணை நடத்த கடந்த 3-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் செல்ல முயற்சித்தனர். ஆனால், மேற்கு வங்க காவல் துறையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 
சிபிஐயின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள்கள் தர்னாவில் ஈடுபட்டார். இதையடுத்து, விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாகவும், மேற்கு வங்க அரசு அவருக்கு உதவி வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. 
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், இது குறித்து விளக்கம் அளிக்குமாறும் ராஜீவ் குமார் உள்ளிட்ட மாநில அதிகாரிகளுக்குக் கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது. 
இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் ராஜீவ் குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், மேற்கு வங்க தலைமைச் செயலர் மலை குமார் டே, காவல் துறைத் தலைமை இயக்குநர் வீரேந்திர குமார், ராஜீவ் குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாகப் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தனர். அதில் சிபிஐயின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது:
மேற்கு வங்க காவல் அதிகாரிகள் சிபிஐயின் விசாரணைக்கு ஒருபோதும் தடை ஏற்படுத்தவில்லை. மாநில அதிகாரிகள் சிபிஐ அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவும் மறுக்கவில்லை. உரிய ஆதாரங்கள் இன்றி சிபிஐ குற்றம் சாட்டி வருகிறது. உரிய ஆவணங்கள் இன்றி ராஜீவ் குமாரை விசாரிக்க முயன்ற காரணத்தினாலேயே சிபிஐ அதிகாரிகளைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
சிபிஐயின் நடவடிக்கைக்கு எதிராக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடத்திய தர்னாவில் காவல் துறையினர் யாரும் பங்கேற்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். ராஜீவ் குமார் தனது பிரமாணப் பத்திரத்தில், நிதி நிறுவன மோசடி தொடர்பான ஆவணங்கள் எதையும் நான் நேரடியாகக் கையாளவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமா? என்பது குறித்தான முடிவு, பிரமாணப் பத்திரங்களை ஆராய்ந்தபின் பிப்.19-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com