நேஷனல் ஹெரால்டு வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது தில்லி உயர்நீதிமன்றம்

காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகை செயல்பட்டு வரும் இடத்தை காலி செய்வது தொடர்பான வழக்கின் தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது தில்லி உயர்நீதிமன்றம்


காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகை செயல்பட்டு வரும் இடத்தை காலி செய்வது தொடர்பான வழக்கின் தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை முடிந்துள்ள நிலையில்  மத்திய அரசுத் தரப்பு மற்றும்  பத்திரிகை தரப்பில் இறுதி வாதங்களை எழுத்துமூலம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தில்லியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம்  செயல்பட்டு வந்தது. இந்நிலையில், பல ஆண்டுகளாக பத்திரிகை வெளிவராததையடுத்து, அரசு இடத்தைக் காலி செய்யுமாறு அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி, நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், அந்த இடத்திலிருந்து 2 வாரங்களுக்குள் வெளியேற வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி உத்தரவிட்டார்.
தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. திங்கள்கிழமை வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
மற்றொரு வழக்கு: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை, ராகுல், சோனியா ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக மற்றொரு வழக்கு உள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90.25 கோடி அளவுக்கு கடன் அளித்ததை காரணம் காட்டி, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010-இல் கையகப்படுத்தியது; இதன் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்துவிட்டதாக பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த பரிவர்த்தனைகளை அடிப்படையாக கொண்டு, ராகுல், சோனியா உள்ளிட்டோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் விசாரணையை தொடங்கினர். 2011-12ஆம் நிதியாண்டில் தனது வருமானம் ரூ.68 லட்சம் என்று ராகுல் கணக்கு காட்டியதாகவும், ஆனால், யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குநரான அவருக்கு அந்த ஆண்டு கிடைத்த வருவாய் ரூ.154 கோடி என்றும் வருமான வரித் துறை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, ராகுல், சோனியா காந்தி, யங் இந்தியன் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் கடந்த 2011-12இல் தாக்கல் செய்த வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்வதாக அவர்களுக்கு கடந்த ஆண்டு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com