பாகிஸ்தானுடன் இனி பேச்சு இல்லை: பிரதமர் நரேந்திர மோடி

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம், அமைதிப்பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்து விட்டது என்பதையே காட்டுகிறது என்று
பாகிஸ்தானுடன் இனி பேச்சு இல்லை: பிரதமர் நரேந்திர மோடி


ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம், அமைதிப்பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்து விட்டது என்பதையே காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பாகிஸ்தானுடன் இனி அமைதிப் பேச்சுவார்த்தை கிடையாது என்பதையே அவர் இவ்வாறு மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
இந்தியா வந்துள்ள ஆர்ஜென்டீனா அதிபர் மொரீசியோ மேக்ரி தலைமையிலான குழுவினர், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். பின்னர், மொரீசியோ மேக்ரி முன்னிலையில் செய்தியாளர்களுக்கு மோடி பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவம், அமைதிப்பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்து விட்டது என்பதையே காட்டுகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிராகவும், அதை ஆதரிப்போருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டுவது, அதை ஊக்குவிப்பதற்குச் சமமாகும். எனவே, பயங்கரவாதத்துக்கு எதிராகவும், அதை ஆதரிப்போருக்கு எதிராகவும் உலக நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மோடி.
கூட்டறிக்கை வெளியீடு: அதைத் தொடர்ந்து, மோடியும், மேக்ரியும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். 
பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிமொழி என்ற பெயரில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
உலக அமைதிக்கும், அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம். எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை வேரறுப்பதில் இந்தியாவும், ஆர்ஜென்டீனாவும் உறுதியுடன் உள்ளன. பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், அவர்களுக்கு நிதியுதவி, புகலிடம் அளித்து ஊக்குவிப்போருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதிகளின் புகலிடம் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், அது அழிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஒப்பந்தங்கள் கையெழுத்து: முன்னதாக, மோடி-மேக்ரி இடையேயான பேச்சுவார்த்தையின் முடிவில், ராணுவம், அணுசக்தி, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக, இந்தியா-ஆர்ஜென்டீனா இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மீண்டும் பதற்றம்: 
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் பயங்கரவாதி கடந்த வாரம் நிகழ்த்திய தற்கொலை தாக்குதலில், இரு தமிழக வீரர்கள் உள்பட 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ரத்தான பேச்சுவார்த்தை: ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் இருந்தது. இதனிடையே, பாகிஸ்தானின் புதிய பிரதமராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்ற இம்ரான் கான், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்து, பிரதமர் மோடிக்கு கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அவரது கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருந்தது. அதன்படி, நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மஹ்மூத் குரேஷியும் சந்தித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் 3 போலீஸாரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமான முறையில் கொன்றதாலும், இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானியின் நினைவாக பாகிஸ்தான் அரசு அஞ்சல் தலை வெளியிட்டதாலும் அந்த பேச்சுவார்த்தையை இந்திய அரசு ரத்து செய்தது. 
இந்நிலையில், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com