பாக். ஆதரவு பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும்: பிரதமருக்கு லோக் ஜனசக்தி கடிதம்

புல்வாமாவில் கொடூரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை வேரறுக்கும் நடவடிக்கையை


புல்வாமாவில் கொடூரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை வேரறுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. 
அக்கட்சியின் நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழு தலைவர் சிராக் பாஸ்வான், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:  உங்களது (மோடி) தலைமையின் கீழ் கடந்த 5 ஆண்டுகளாக நாடு அனைத்து விதங்களிலும் வளர்ச்சி கண்டு வருகிறது. இதை பாகிஸ்தானால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இந்தியாவை பாதிக்கும் கோழைத்தனமான பல்வேறு நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொண்டு வருகிறது. தற்போது புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது நாட்டு மக்களை, குறிப்பாக இளைஞர்களை கொதிப்படையச் செய்துள்ளது. அந்தத் தாக்குதலில் பலியான வீரர்களின் புகைப்படங்களை செய்தித் தாள்களில் பார்த்தேன். அவர்களது குடும்பத்தினரின் இழப்பையும், வலியையும் என்னால் உணர முடிந்தது. 
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற இருந்த லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய நிர்வாகக் குழு கூட்டமானது, இந்தத் துயரமான சம்பவத்தை அடுத்து இரங்கல் தெரிவிக்கும் கூட்டமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. புல்வாமா தாக்குதல் சம்பவத்தால் கவலை அடைந்துள்ள லோக் ஜனசக்தி கட்சித் தொண்டர்கள், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் தலைவர்கள் மீது கோபம் கொண்டுள்ளனர். எங்கள் கட்சி மற்றும் தேசத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் ஒரே எதிர்பார்ப்பு, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான்.
இந்த முறை, கடைசி பயங்கரவாதி கொல்லப்படும் வரையிலும் அத்தகைய நடவடிக்கை நிறுத்தப்படக் கூடாது என்று சிராக் பாஸ்வான் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com