பாஜக - சிவசேனை கூட்டணி: அமித் ஷா-உத்தவ் தாக்கரே கூட்டாக அறிவிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி அமைத்துப் போட்டியிடும்
மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணியை திங்கள்கிழமை அறிவித்த அமித் ஷா, உத்தவ் தாக்கரே, தேவேந்திர ஃபட்னவீஸ்.
மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணியை திங்கள்கிழமை அறிவித்த அமித் ஷா, உத்தவ் தாக்கரே, தேவேந்திர ஃபட்னவீஸ்.


மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் திங்கள்கிழமை கூட்டாக அறிவித்தனர்.
மகாராஷ்டிரத்தில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனை 23 தொகுதிகளிலும் போட்டியிட இருக்கின்றன. 
முன்னதாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனை இடம் பெற்றிருந்தபோதும், மத்திய அரசை சிவசேனை கடுமையாக விமர்சித்து வந்தது. எனவே, பாஜக கூட்டணியில் சிவசேனை நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், இப்போது கூட்டணி உறுதியாகியுள்ளது. 
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இக்கூட்டணி மகாராஷ்டிரத்தில் 48-இல் 45 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மகாராஷ்டிரத்திலும் இந்தக் கூட்டணிதான் ஆட்சியில் உள்ளது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் இரு கட்சிகளும் சமஅளவிலான தொகுதிகளில் போட்டியிடுவது என ஒப்புக் கொண்டுள்ளன. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனியாகவே போட்டியிட்டன. ஆனால், தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கு சிவசேனை ஆதரவு அளித்தது.
இந்நிலையில், மும்பையில் அமித் ஷா, உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கூட்டணி தொடர்பான அறிவிப்பை அவர்கள் வெளியிட்டனர். பாஜக-சிவசேனை இணைந்து போட்டியிட வேண்டும் என்பதுதான் மகாராஷ்டிர மக்களின் எண்ணமாக உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.
பாஜகவின் நீண்டகால நண்பனாகவும், கூட்டணிக் கட்சியாகவும் சிவசேனை திகழ்கிறது. இரு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் சிறந்த ஒருங்கிணைப்பு உண்டு. கூட்டணியாக போட்டியிட வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எண்ணம் என்று அமித் ஷா கூறினார்.
இரு கட்சிகளுமே ஹிந்துத்துவ கொள்கை உடையவை. தேசிய நலன் சார்ந்த கொள்கையை முன்னிறுத்தும் பாஜகவும் சிவசேனையும் பொதுநலன் கருதி இணைந்துள்ளன என்று தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com