புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு என்ன என்ற கேள்விக்கு எத்தனையோ ஆதாரங்கள் இருந்தாலும், தற்போது கிடைத்திருப்பது மிக முக்கிய ஆதாரமாகும்.
புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்


புது தில்லி: புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு என்ன என்ற கேள்விக்கு எத்தனையோ ஆதாரங்கள் இருந்தாலும், தற்போது கிடைத்திருப்பது மிக முக்கிய ஆதாரமாகும்.

அதாவது, புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆர்டிஎக்ஸ்-ஐ ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள், அது ராணுவத்துக்குப் பயன்படுத்தும் தரத்துடன் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவப் பகுதியில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து வரும் தடயவியல் நிபுணர்கள், ஆர்டிஎக்ஸ் மருந்தானது மிகவும் திடமாக இருந்ததாகக் கூறியுள்ளனர்.

இது இந்தியாவுக்கு சிறிது சிறிதாக கொண்டு வரப்பட்டு, சேமித்து வைத்து, ஒன்றாக சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதுவும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 5 முதல் 7 கி.மீ. தொலைவுக்குள் சேமித்து வைத்து சேர்க்கப்பட்டுள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு சம்பவப் பகுதியில் பெய்த மழை காரணமாக மிக முக்கிய ஆதாரங்கள் மழையில் அடித்துச் செல்லப்பட்டுவிட்ட நிலையில், தாக்குதலுக்கு 50 - 70 கிலோ ஆர்டிஎக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், முன்புக் கூறப்பட்டது போல 100 - 300 கிலோ ஆர்டிஎக்ஸ் பயன்படுத்தப்பட்டிருந்தால், சேதம் இதை விட மிக மோசமாக இருந்திருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இறுதி அறிக்கை வெளியாக இன்னும் சில காலம் பிடிக்கலாம் என்ற நிலையில், தற்போது கிடைத்திருக்கும் சில தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், வெடிகுண்டு தயாரிப்பில் மிகவும் கைதேர்ந்த ஒரு பயங்கரவாதி இந்தியாவுக்குள் ஊடுருவி வந்து, வெடிபொருட்களை வெடிக்கச் செய்யும் ஸ்விட்ச், டெட்டநேட்டர் மற்றும் பவர் ஃப்யூஸ் ஆகியவற்றை ஒன்றாக இணைத்துக் கொடுத்திருக்க வேண்டும். அதுவும் தாக்குதல் நடத்துவதற்கு சற்று நேரத்துக்கு முன்புமதான் இதைச் செய்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தின் ஒவ்வொரு கிராமுக்கும் கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் ஏற்கனவே பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது வெட்டவெளிச்சமான நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து, பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது, அதுவும் காஷ்மீரில், உள்நாட்டு இளைஞரையே தற்கொலைப் படைத் தாக்குதலாக மாற்றி, பயங்கரவாதத் தாக்குதல் நடத்த முடியும் என்ற தகவல் புலனாய்வு அதிகாரிகளை மேலும்  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முன்னதாக, 
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது ஜெய்ஷ் - இ - மொஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் தளபதி ரஷீத் காஸி என்று புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷீத் காஸி குப்வாரா அருகே இந்திய எல்லைக்குள் சில உதவியாளர்களுடன் இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஊடுருவியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கண்ணிவெடித் தாக்குதலில் கைதேர்ந்தவன் என்றும், பிப்ரவரி 14ம் தேதி தற்கொலைத் தாக்குதல் நடத்திய அடில் அகமது தாருக்கு இவன் பயிற்சி அளித்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு உதவிய மற்றொரு பயங்கரவாதி கம்ரான். இவன் பூஜ்ச் அருகே எல்லைக்குள் ஊடுருவி வந்திருக்கலாம். முக்கியமாக, இந்த தாக்குதலை நடத்த பாகிஸ்தானில் இருந்து எத்தனை பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பார்கள் என்பதை இந்திய ராணுவத்தினரால் இதுவரை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் குறைந்தது 10 பயங்கரவாதிகளாவது இந்த சதிச் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இந்த தீவிரவாதிகள் அனைவரும் குறிப்பிட்ட இடைவெளியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருக்கலாம் என்றும், பெரும்பாலும் பூஞ்ச் அருகே ஊடுருவியிருக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவுக்குள் ஊடுருவிய அனைத்து பயங்கரவாதிகளும் தங்களுடன் ஏராளமான வெடிபொருட்களை சுமந்து வந்திருக்கின்றனர். இதன் மூலம் எல்லையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கையின் உறுதித் தன்மையில் கேள்வி எழுகிறது.

புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்யும் நிபுணர்கள் அனைவரும், இந்த சதித்திட்டம் மிகவும் திட்டமிட்டு தாக்குதல் நடக்கும் நேரம், இடம் உள்ளிட்டவை துல்லியமாக முடிவு செய்து நடத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.


இந்த நிலையில் தெற்குக் காஷ்மீரில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாகக் கூறப்படும் ரஷீத் மற்றும் கம்ரான் ஆகியோர் மறைந்திருக்கும் பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தியதில்,  இருவரும் கொல்லப்பட்டதாக ராணுவத்தினர் நேற்று அறிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com