சுடச்சுட

  

  பசுமைப் பட்டாசு தயாரிக்க முதலில் ஒப்புக் கொண்டு இப்போது சிரமம் என்பதா? உச்ச நீதிமன்றம் கேள்வி

  By DIN  |   Published on : 20th February 2019 01:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SupremeCoaurtPTI12121_PT12I12r


  புது தில்லி: பசுமைப் பட்டாசு தயாரிக்க ஒப்புக் கொண்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தற்போது அதனை தயாரிப்பது சிரமம் என்று சொல்வது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

  பசுமைப் பட்டாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

  விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது, தில்லியை விட காற்றின் தரம் மோசமாக இருக்கும் நகரங்கள் நாட்டில் உள்ளன. பசுமை பட்டாசைத் தயாரிக்கும் எளிமையான வழியைக் காண வேண்டிதுதானே ஆலைகளின் கடமை. ஆரம்பத்தில் பசுமைப் பட்டாசு தயாரிப்பதாக ஒப்புக் கொண்டுவிட்டு, தற்போது சிரமம் என்கிறீர்களே? என்று கேள்வி எழுப்பினர்.

  இது குறித்து பிற்பகலில் ஆஜராகி விளக்கமளிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

  பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் என்னும் வேதிப் பொருளைப் பயன்படுத்தக் கூடாது. பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

  இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,070 பட்டாசு ஆலைகள் 100 நாள்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. பசுமை பட்டாசுகள் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்கள் இல்லாத நிலையில், பட்டாசு ஆலைகளைத் திறந்து உற்பத்தியைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

  இந்நிலையில் பட்டாசு ஆலைகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அதனால் பழைய முறைப்படி பட்டாசுகளைத் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

  இந்நிலையில் பட்டாசு தயாரிப்பு தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக்கோரி தமிழக அரசு சீராய்வு மனுவினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவினை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai