
கோப்புப்படம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் குரலாக பேசுகிறார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
புல்வாமா சம்பவத்தின் எதிரொலியாக, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி தரப்படும் என்று இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மேலும், அந்த சம்பவம் தொடர்பாக தகுந்த ஆதாரங்களை அளித்தால் விசாரணை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்திய ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் குரலாக அவர் பேசுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்த கருத்துகள் வருந்தத்தக்கவை. ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் குரலாக அவர் பேசுகிறார். கடந்த 1971-இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும், இந்திய ராணுவமும் பாகிஸ்தானை இரண்டாக உடைத்து, வங்கதேசத்துக்கு விடுதலை பெற்றுத் தந்ததை மறந்துவிட வேண்டாம். அந்த காலகட்டத்தில் சுமார் 91,000 பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், இம்ரான் கான் அவர்களே, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸார், பாகிஸ்தானின் பிலாவல்பூரில் இருந்து கொண்டு, ஐஎஸ்ஐ உதவியுடன் தாக்குதல் சதித் திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார். அங்கு சென்று அவரை கைது செய்யுங்கள். காஷ்மீரிலும், இந்தியாவின் இதர பகுதிகளிலும் பாகிஸ்தான் என்னென்ன செயல்களில் ஈடுபடுகிறது என்பது உலகறிந்த உண்மை என்று தெரிவித்துள்ளார்.