
எல்லையில் தினமும் போராடுவதைக் காட்டிலும், பாகிஸ்தானுடன் போர் புரிந்துவிடுவதே சிறந்தது என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் பதஞ்சலி குழுமத்தின் புதிய விற்பனையகத்தை திறந்து வைத்து ராம்தேவ் பேசியதாவது: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டுவரும் பிரிவினைவாதக் குழுக்களுக்கு இந்தியா ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்.
பாகிஸ்தானையொட்டியுள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் தினமும் நடைபெறும் அத்துமீறல்கள் எதிர்த்து போராடிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, அந்நாட்டுக்கு எதிராக நாம் போர் புரிய வேண்டும். பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டியாக வேண்டும். அடுத்த 50 ஆண்டுகளுக்கு நம்மை எதிர்க்க அவர்கள் தயங்க வேண்டும்.
பயங்கரவாத முகாம்களை அழித்தொழித்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும். பலூசிஸ்தான் விடுதலை பெற இந்தியா பங்களிப்பு செய்ய வேண்டும். ராமர் கோயில் விவகாரம் அரசியல் பிரச்னையல்ல. நாட்டின் பெருமையுடன் அது சம்பந்தப்பட்டது. ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் மனமுவந்து தெரிவிக்க வேண்டும் என்றார் ராம்தேவ்.