இந்தியா தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுப்போம்: இம்ரான் கான்

இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
இந்தியா தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுப்போம்: இம்ரான் கான்


இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதாக இந்திய பாதுகாப்புப் படையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மக்களுக்கு விடியோ மூலம் இம்ரான் கான் தனது செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தெற்காசியப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பம் ஆகும். இந்தியாவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டுகள் தெரிவித்தால், இத்தேர்தலில் வாக்குகளை எளிதில் பெறலாம். அதனால் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த விவகாரத்தில் நல்லதே நடக்கும் என்றும், இந்தியா பேச்சுவார்த்தை நடத்த சம்மதிக்கும் என்றும் நம்புகிறோம்.
காஷ்மீரில் என்ன நடந்தாலும், அதற்கு பாகிஸ்தான் மீது இந்தியா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறது. அதற்கு பாகிஸ்தானையும் மீண்டும் மீண்டும் மறுப்புத் தெரிவிக்க வைக்கிறது. காஷ்மீர் விவகாரம் என்பது ஆப்கானிஸ்தான் விவகாரம் போன்றது ஆகும். இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பது தொடர்பாக நம்பகமான புலனாய்வு தகவல் இருந்தால், அதை பாகிஸ்தானிடம் இந்தியா அளிக்க வேண்டும். அதன்மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளிக்கிறேன்.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு நிர்பந்தம் அளிக்கப்படுவதால், இவ்வாறு தெரிவிக்கவில்லை. ஆனால், பாகிஸ்தானை இந்தியாதான் எதிரியாக நடத்துகிறது. இந்திய ஊடகங்களும், அரசியல்வாதிகளும், புல்வாமா தாக்குதலுக்காக பாகிஸ்தானை பழிவாங்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.
ஒருவேளை பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று இந்தியா நினைத்தால், அப்போது பாகிஸ்தான் யோசித்துக் கொண்டிருக்காது. அதற்கு பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்கும். போரை தொடங்குவது குறித்து எளிதாக நம்மால் முடிவெடுக்க முடியும். ஆனால் போரை முடிவுக்கு கொண்டு வருவது நமது கைகளில் இருக்காது. போர் காலத்தில் என்ன நடைபெறும் என யாருக்கும் தெரியாது.
பயங்கரவாதம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. தற்போதைய பாகிஸ்தான், புதிய பாகிஸ்தான் என்றும், புதிய மனநிலையில் உள்ளது என்றும் நான் உறுதியாக தெரிவிக்கிறேன். பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் பயங்கரவாதத்தையும் சேர்ப்பது குறித்து இந்தியா பேசி வருகிறது. பயங்கரவாதம் என்பது மிகப்பெரிய விவகாரமாகும். அதை இந்த பிராந்தியமே எதிர்கொண்டு வருகிறது. அதை பாகிஸ்தானும் அழிக்க வேண்டும் என விரும்புகிறது.
பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானை யாரும் தளமாக பயன்படுத்தினால், அதை பாகிஸ்தான் தனக்கெதிரான நடவடிக்கையாக கருதுகிறது. அது பாகிஸ்தான் நலனுக்கு எதிரான நடவடிக்கையாகும். புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுக்கு என்ன பயன் கிடைக்க போகிறது என்பது குறித்து யோசிக்காமலேயே, பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சுமத்துகிறது. 
பாகிஸ்தானில் சவூதி அரேபியா இளவரசர் சுற்றுப்பயணம் மேற்கொள்கையில், அதை கெடுக்கும் வகையிலான நடவடிக்கையை முட்டாள் கூட எடுக்க மாட்டார்கள். பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் கடந்த 15 ஆண்டுகளாக போரிட்டு வருகிறது. அப்படியிருக்கையில், புல்வாமா போன்ற சம்பவங்களால் பாகிஸ்தானுக்கு என்ன நல்லது நடக்க போகிறது?
காஷ்மீர் விவகாரத்துக்கு ராணுவத்தின் மூலம் இந்தியா தீர்வு காண போகிறதா? நிச்சயம் அதற்கு வெற்றி கிடைக்காது என்றார் இம்ரான் கான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com