குல்பூஷண் வழக்கை ஒத்திவைக்க பாக். கோரிக்கை: சர்வதேச நீதிமன்றம் நிராகரிப்பு

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் தொடர்பான வழக்க விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்தது.


இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் தொடர்பான வழக்க விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்தது.
சர்வதேச நீதிமன்ற அமர்வில், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் நீதிபதிக்கு பதிலாக மற்றொரு நீதிபதியை நியமிக்கும் வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. ஆனால், நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. வழக்கில் தொடர்புடைய நாடுகளின் சார்பில் ஓர் நீதிபதி, விசாரணை அமர்வில் இடம்பெறுவார் என்ற நிலையில், பாகிஸ்தான் நீதிபதிக்கு திங்கள்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.
பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத செயல்களை தூண்டியதாகவும் குல்பூஷண் ஜாதவ் (48) மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. 2017 மே 18-ஆம் தேதி, சர்வதேச நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை முடிவடையும் வரையில் குல்பூஷண் ஜாதவுக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை: இந்நிலையில், இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி விசாரணை நடைபெற்று வருகிறது. குல்பூஷண் ஜாதவின் தூக்கு தண்டனையை ரத்து செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா வாதாடியது. குறிப்பாக, ஈரானுக்கு தொழில் நிமித்தமாக சென்றிருந்த அவரை, பாகிஸ்தான் கடத்திக் கொண்டு வந்து தண்டனை விதித்ததாகவும் இந்தியா குற்றம்சாட்டியது.
இந்நிலையில், வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பாகிஸ்தான் வழக்குரைஞர் கவார் குரேஷி ஆஜராகி, இந்தியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார். அவர் முன்வைத்த வாதம்:
இந்தியா தனது வாதத்தால் நிறைய நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. நல்ல நம்பிக்கையும் சர்வதேச சட்டத்தின் ஒரு பகுதிதான். 
இந்தியாவுக்கு பாகிஸ்தானை பற்றி தெரியாது. அமைதிக்காக மாபெரும் பங்களிப்புகளை அளித்திருப்பது பாகிஸ்தான் தேசம். உலகப் பாதுகாப்புக்காக எங்கள் வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
இந்தியா குற்றம்சாட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறது. அரசியல் லாபங்களுக்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. 
அதே சமயம், குல்பூஷண் ஜாதவ் ஓர் உளவாளிதானே தவிர, தொழிலதிபர் அல்ல. பயங்கரவாதம் என்ற இந்தியாவின் அதிகாரப்பூர்வ கொள்கையின் கருவிதான் ஜாதவ் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com