சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் அஸ்ஸாம் தடுப்புக் காவல் மையங்களில் பல ஆண்டுகளாக அடைப்பு: உச்சநீதிமன்றம் கவலை

அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் பல ஆண்டுகளாக தடுப்புக் காவல் மையங்களில் அடைக்கப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் அஸ்ஸாம் தடுப்புக் காவல் மையங்களில் பல ஆண்டுகளாக அடைப்பு: உச்சநீதிமன்றம் கவலை


அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் பல ஆண்டுகளாக தடுப்புக் காவல் மையங்களில் அடைக்கப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
அஸ்ஸாமிலுள்ள தடுப்புக் காவல் மையங்களில் மனித உரிமைகள் மீறப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைக் கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், தடுப்புக் காவல் மையங்களின் நிலை குறித்த தகவல்களையும், அங்குக் கடந்த 10 ஆண்டுகளில் தங்கவைக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களையும் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. 
இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எல்.என். ராவ், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
அப்போது, அஸ்ஸாம் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி மத்திய, மாநில அரசுகள் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளன. நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 27,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 
அஸ்ஸாமிலுள்ள 6 தடுப்புக் காவல் மையங்களில் 938 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் 823 பேரை வெளிநாட்டினர் என்று தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. மாநிலத்தில் பல்வேறு வசதிகள் கூடிய புதிய தடுப்புக் காவல் மையம் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.47 கோடி ஒதுக்கியுள்ளது. மாநில அரசும் அதற்கு நிலம் ஒதுக்கியுள்ளது. வரும் ஆகஸ்டு 31-ஆம் தேதிக்குள் புதிய தடுப்புக் காவல் மையத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிடும் என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:
அஸ்ஸாமில் கடந்த 50 ஆண்டுகளாக சட்டவிரோதக் குடியேற்றப் பிரச்னை அதிகரித்து வருகிறது. மாநிலத்திலுள்ள வெளிநாட்டினரைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட தீர்ப்பாயம், இதுவரை சுமார் 52,000 பேரை வெளிநாட்டவர் என்று அறிவித்துள்ளது. ஆனால், 162 பேர் மட்டுமே நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை வெளியேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தடுப்புக் காவல் மையங்களில் பெரும்பாலானோர் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டு உள்ளனர். அந்த மையங்களின் நிலைமையும் மோசமாக உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நீதித்துறையின் தலையீடு அவசியமாக உள்ளது. 
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் உள்ளிட்டவற்றுடன் மாநில அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். 
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளிக்க துஷார் மேத்தா 2 வாரங்கள் கால அவகாசம் கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் மாதம் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com