தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் 112 எண் சேவை தொடக்கம்: அவசர உதவிகளுக்கு ஒரே எண்

தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொதுமக்களின் அவசர உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி சேவை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.


தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொதுமக்களின் அவசர உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி சேவை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொலைபேசி சேவை, முதல்கட்டமாக ஹிமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டது. இதையடுத்து தமிழகம், ஆந்திரம், உத்தரகண்ட், பஞ்சாப், கேரளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான், தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி, டாமன் அன்ட் டையு, ஜம்மு -காஷ்மீர் ஆகிய 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
போலீஸாருக்கு 100 என்ற எண்ணையும், தீயணைப்பு படைக்கு 101, சுகாதாரத் துறையினருக்கு 108, பெண்கள் தொடர்பான உதவிகளுக்கு 1090 என்ற எண்ணையும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு  வந்தனர். 
ஆனால் இனி 112 என்ற ஒரே எண்ணிலேயே அனைத்து வகையான உதவிகளையும் பொதுமக்கள் கோர முடியும்.
நெருக்கடி காலத்தில் உதவி கோர விரும்புவோர், தொலைபேசியில் 112 என்ற எண்ணை அழுத்தினாலோ, ஸ்மார்ட் போன் செல்லிடப்பேசி எனில், அதை ஆன் செய்ய பயன்படுத்தப்படும் பொத்தானை 3 முறை அழுத்தினாலோ, அவசரகால உதவி சேவை மையத்துக்கு அழைப்பு செல்லும். சாதாரண செல்லிடப்பேசி எனில், 5ஆம் எண் பொத்தான் அல்லது 9ஆம் எண் பொத்தான் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நீண்ட நேரம் அழுத்த வேண்டும். செல்லிடப்பேசியில் 112 என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து, அதன்மூலமும் உதவி கோரலாம்.
அந்த அழைப்பு, 112 சேவை மையத்துக்கு செல்லும். அதில் பேசும் அதிகாரிகள், பொதுமக்கள் கோரும் உதவி வகைகளை கவனத்தில் கொண்டு, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம், சுகாதார நிலையம் மற்றும் பிற உதவிகள் மையங்களில் ஏதேனும் ஒன்றுக்கு தகவல் அனுப்புவர். அதன்மீது சம்பந்தப்பட்ட துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு உதவி செய்வர்.
அமெரிக்காவில் 911 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, அனைத்து வகையான உதவிகளையும் அந்நாட்டு மக்கள் கோர முடியும். 
அந்த வரிசையில் இந்தியாவில் தற்போது 112 என்ற எண் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், அடுத்த ஆண்டுக்குள் 112 எண் சேவை, நாடு முழுமைக்கும் தொடங்கப்படும். அதன்பிறகு செல்லிடப்பேசியில் இருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினாலேயே இந்த சேûவையை பெறலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com