திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி உடன்பாடு இன்று அறிவிப்பு: தில்லியில் கே.எஸ். அழகிரி பேட்டி

மக்களவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி உடன்பாடு தொடர்பான அறிவிப்பு புதன்கிழமை வெளியாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி உடன்பாடு இன்று அறிவிப்பு: தில்லியில் கே.எஸ். அழகிரி பேட்டி


மக்களவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி உடன்பாடு தொடர்பான அறிவிப்பு புதன்கிழமை வெளியாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி, கட்சியின் மூத்தத் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, ப. சிதம்பரம், எஸ். திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி உள்ளிடோர் பங்கேற்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் கே.எஸ். அழகிரி கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியும், திமுகவும் சமூக நீதிக்காகப் போராடிய கட்சிகளாகும். சமூக நீதி மீது அக்கறை கொண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, திமுக-காங்கிஸ் கூட்டணியில் இருந்திருக்க வேண்டும். 
தனது கொள்கைகளுக்கு நேர் எதிரான கூட்டணியில் சேர்ந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. கூட்டணி என்பது குறைந்தபட்ச கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்தக் கொள்கையும் இல்லாமல் யாருடன் கூட்டணி சேருவது நல்லதல்ல. அது ஒரு பிழையான அரசியலாகும். பிறப்படுத்தப்பட்டோர் நலனுக்காகப் போராடி வரும் பாமக, முற்பட்டோர் நலனுக்காகப் போராடி வரும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது ஏற்புடையதல்ல. 
மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை பாமக செய்துள்ளது. அதிமுகவுக்கு எதிராக ஊழல் புகார்களை அளித்த பாமக இப்போது என்ன சொல்லப்போகிறது எனத் தெரியவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கெனவே முடிவாகிவிட்டது. எப்படி செயல்பட போகிறோம் என்பது என்ற அறிவிப்பு சென்னையில் புதன்கிழமை வெளியிடப்படும் என்றார் கே.எஸ். அழகிரி.
இந்த சந்திப்புக்குப் பிறகு அக்கட்சியின் மூத்த தலைவர் எஸ். திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தொகுதிப் பங்கீடு குறித்து திமுக-காங்கிரஸ் இடையிலான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட நிறைவுபெற்றுள்ளது என்றார்.
பேச்சுவார்த்தை தாமதம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், புதுத் திருமணமும், கட்டாயத் திருமணமும் அவசர கதியில் நடைபெறும். தமிழகத்தில் பாஜகவுக்கு அஸ்திவாரம் இல்லை என்றார்.
கனிமொழி சந்திப்பு: காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னையில் புதன்கிழமை திமுக தலைமையகமான அறிவாலயத்தில் இருந்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com