தெலங்கானா அமைச்சரவை விரிவாக்கம்: 10 பேருக்கு அமைச்சர் பதவி

தெலங்கானா அமைச்சரவையை முதல்வர் சந்திரசேகர் ராவ் செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்தார். அமைச்சரவையில் புதிதாக 10  பேரை அவர் சேர்த்தார்.


தெலங்கானா அமைச்சரவையை முதல்வர் சந்திரசேகர் ராவ் செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்தார். அமைச்சரவையில் புதிதாக 10  பேரை அவர் சேர்த்தார்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். 
அவருடன் முகமது மகமூத் அலி என்பவரும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு உள்துறை இலாகா ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சரவை நீண்டநாள்களாக விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இந்நிலையில், தெலங்கானா அமைச்சரவையை முதல்வர் சந்திரசேகர் ராவ் செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்துள்ளார். ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நிரஞ்சன் ரெட்டி, கோப்புல ஈஸ்வர், எரபள்ளி தயாகர் ராவ், வி. ஸ்ரீநிவாஸ் கௌட், வேமுலா பிரசாந்த் ரெட்டி, மல்ல ரெட்டி, இந்திராகரன் ரெட்டி, தலசானி ஸ்ரீநிவாஸ் யாதவ், ஜி. ஜெகதீஷ் ரெட்டி, இடலா ராஜேந்தர் ஆகிய 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 
அவர்களுக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
சந்திரசேகர் ராவின் மருமகனும், டிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவருமான டி.ஹரீஷ் ராவ், மகன் கே.டி. ராமா ராவ் ஆகியோர் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். 
அதனால், அமைச்சரவை விரிவாக்கத்தில் இருவருக்கும் பதவி அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.
இதேபோல்,  பெண்கள் யாரும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. முந்தைய அமைச்சரவையிலும் பெண்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவையில் புதிதாக 10 பேருக்கு இடமளிக்கப்பட்டதையும் சேர்த்து, மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com