தேர்தல் வெற்றிக்காக போர் தந்திரங்களைக் கையாளக் கூடாது: பாஜகவுக்கு சிவசேனை எச்சரிக்கை

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, போர்த் தந்திரங்கள் எதையும் கையாளக் கூடாது என சிவசேனை கட்சி எச்சரித்துள்ளது.


மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, போர்த் தந்திரங்கள் எதையும் கையாளக் கூடாது என சிவசேனை கட்சி எச்சரித்துள்ளது.
மக்களவைத் தேர்தலிலும், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட பாஜகவும், சிவசேனையும் திங்கள்கிழமை முடிவு செய்தநிலையில், சிவசேனையின் எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் செவ்வாய்க்கிழமை வெளியான தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் போர்த் தந்திரங்களைக் கையாளவும் பிரதமர் நரேந்திர மோடி தயங்க மாட்டார் என்று அரசியல் பிரமுகர்கள் அண்மையில் குற்றம் சாட்டி வந்தனர். இந்தக் குற்றச்சாட்டுகளை உண்மையாக்கும் வகையில் ஆட்சியில் இருப்பவர்கள் (பாஜக) நடந்துகொள்ளக் கூடாது.
நாடு இன்னமும் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ஜம்மு-காஷ்மீரில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதத் தாக்குதலையும், வன்முறையையும் அரசியல் ஆதாயத்துக்காக யாரும் பயன்படுத்தக் கூடாது. அதேபோல், பயங்கரவாதத் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு, மற்ற மாநிலங்களில் வசித்து வரும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மக்களைத் துன்புறுத்தக் கூடாது.
கடந்த 1984-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தன்னுடைய பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின் நாடு முழுவதும் வெடித்த வன்முறை அனைவருக்கும் நினைவிருக்கலாம். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட களங்கம் இன்று வரை தீரவில்லை. எனவே, இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பலர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தாக்குதலுக்குப் பிறகும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறிய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் அனைத்துக்கும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கே பொறுப்பு என்று பாஜகவும், ஆர்எஸ்எஸ்யும் தெரிவித்து வந்தன. அப்படியானால், தற்போது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடியே பொறுப்பேற்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்கூட்டிய முடிவு: இதனிடையே, பாஜக-சிவசேனை கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முன்கூட்டியே முடிவெடுக்கப்பட்டது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதில் எந்தவிதப் புதுமையும் இல்லை. இரு கட்சிகளும் கடந்த 25 ஆண்டுகளாக ஒன்றாகவே செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே அவை ஒன்றுக்கொன்று குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்தன. அவை தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கும் என்பது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.
காங்கிரஸுடனான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகிறது. காங்கிரஸ் மற்றும் தேசியாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து விரைவில் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com