புல்வாமா தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்: பாதுகாப்புப் படையிடம் ஆதாரங்கள் உள்ளன

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள், பாதுகாப்புப் படையிடம் உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்: பாதுகாப்புப் படையிடம் ஆதாரங்கள் உள்ளன


புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள், பாதுகாப்புப் படையிடம் உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறியுள்ளார்.
தில்லியில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்தியா மிகவும் பொறுப்புமிக்க நாடு. நாட்டு மக்களைப் பாதுகாக்கும் பணியில் மத்திய அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. புல்வாமா தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது; அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ராணுவம் திட்டமிட்டு முடிவு செய்யும். 
பயங்கரவாதத்தை அழிக்காமல், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என இந்தியா தெளிவாகத் தெரிவித்துள்ளது. அதையும் மீறி இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்தால், அது பயங்கரவாதத்தை அழிப்பது குறித்தாக மட்டுமே இருக்கும். இது குறித்து வெளியுறவு அமைச்சகம் உரிய முடிவெடுக்கும்.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில், பாகிஸ்தானுக்குத் தொடர்பிருப்பது குறித்தான ஆதாரங்கள், பாதுகாப்புப் படையிடமும், புலனாய்வு அமைப்புகளிடமும் உள்ளன. இது குறித்து அந்நாட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகும், பாகிஸ்தான் இவ்வாறே ஆதாரத்தைக் கேட்டது. அந்த ஆதாரத்தை இந்தியா அளித்தபிறகும், அதன் மீது அந்நாடு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்று பல முறை கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com